டெலிபோன் நிறுவனங்களிடம் லைசன்ஸ் கட்டணம் 92,000 கோடி வசூலிக்க மத்திய அரசுக்கு அனுமதி : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெலிபோன் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஆண்டு லைசன்ஸ் கட்டணம் 92 கோடியை வசூலிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புதிய தொலைத் தொடர்பு கொள்கைப்படி, டெலிபோன் நிறுவனங்கள் தங்களின் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயிலிருந்து (ஏஜிஆர்) ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு லைசன்ஸ் கட்டணமாக தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டும். மேலும், அந்நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றைகளை பயன்படுத்துவதற்கான கட்டணமும் செலுத்த வேண்டும். தொலைத் தொடர்பு வருவாய் சாராத வாடகை, சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் லாபம், ஈவுத்தொகை மற்றும் சொத்து வருமானம் ஆகியவை சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயாக கணக்கிடப்பட்டு, அதில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு லைசன்ஸ் கட்டணமாக மத்திய அரசுக்கு டெலிபோன் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என தொலைத் தொடர்பு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த கணக்கீட்டின்படி ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு இதுவரை லைசன்ஸ் கட்டணமாக 21,682.13 கோடி, வோடோபோன் நிறுவனம் 19,823.71 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 16,456.47 கோடி, பிஎஸ்என்எல் 2,098.72 கோடி, எம்டிஎன்எல் 2,537.48 கோடி செலுத்த வேண்டும். இவற்றின் மொத்த மதிப்பு 92 ஆயிரம் கோடி. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், டெலிபோன் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. டெலிபோன் நிறுவனங்களின் கோரிக்கைகளை எல்லாம் நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவைகள் செலுத்த வேண்டிய ஆண்டு லைசன்ஸ் கண்டணம் 92 ஆயிரம் கோடியை, மத்திய தொலைத் தொடர்பு துறை வசூலிக்க அனுமதி வழங்கியது. மேலும், தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய அபராதம் மற்றும் வட்டியையும் டெலிபோன் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு டெலிபோன் நிறுவனங்களுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Stories: