தலைமுடியை வெட்டியதால் மோதல் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் : தயாரிப்பாளர் மீது பகீர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: முடி வெட்டியதற்காக தயாரிப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக மலையாள இளம் நடிகர் ஷேன்நிகம் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள  சினிமா முன்னணி இளம் நடிகர் ஷேன் நிகம்.  ‘அன்னயும் ரசூலும்’ என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘இஷ்க்’, ‘கும்பளங்கி  நைட்ஸ்’ உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது,  வெயில், குர்பானி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து  வருகிறார். இந்நிலையில், மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் ஷேன் நிகம் பரபரப்பு புகாரை அளித்துள்ளார். அதை பேஸ்புக்கிலும் லைவ் வீடியோவாக  வெளியிட்டுள்ளார்.  தனது புகாரில் அவர் கூறியிருப்பதாவது: நான் தற்போது வெயில், குர்பானி என்று 2  படங்களில் ஹீராேவாக நடித்து வருகிறேன். வெயில் படத்தின் முதற்கட்ட  படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது, குர்பானி படத்தில் நடித்து  வருகிறேன். இதற்காக எனது கெட்டப்பை மாற்ற வேண்டும் என்று குர்பானி பட  இயக்குநர் கூறினார். இதையடுத்து, வெயில் பட குழுவினரின் அனுமதியை பெற்று  தலைமுடியை வெட்ட தீர்மானிக்கப்பட்டது. அப்போது, பின்புறம் உள்ள முடியை  கூடுதலாக வெட்டி விட்டனர்.

இதை வேண்டுமென்றே நான் செய்யவில்லை.  மேலும், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தேன். அதனால், படப்பிடிப்பு  நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதிய கெட்டப் புகைப்படத்தை  வாட்ஸ் அப்பில் வெளியிட்டேன். அதை பார்த்த வெயில் பட தயாரிப்பாளர்  ஜோபிஜார்ஜ், என்னை போனில் தொடர்பு கொண்டார். முடி வெட்டியதால் படத்தில்  நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி மிக மோசமாக திட்டினார்.

இது  தவிர, சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறு கருத்து தெரிவித்துள்ளார்.  எனது எதிர்காலத்தை அழித்து விடுவேன் என்றும், தொடர்ந்து வாழ விடமாட்டேன்  என்றும் கூறினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு ஆதாரமாக தயாரிப்பாளர் ஜோபிஜார்ஜ் பேசிய போன்  பேச்சு பதிவையும் நடிகர் சங்கத்தில் ஷேன்நிகம் அளித்துள்ளார். ‘மிரட்டவில்லை’: நடிகர் ஷேன்நிகமின் குற்றச்சாட்டு குறித்து தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் கூறுகையில், ‘‘வெயில் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை முடியை வெட்டக் கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி குர்பானி படத்திற்காக அவர் முடியை வெட்டி விட்டார். இதனால், எனக்கு ெபரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ₹4.80 கோடியை வட்டிக்கு கடன் வாங்கி படத்தை எடுத்து வருகிறேன். இந்த படம் 18ம் தேதி (இன்று) வெளியிட திட்டமிட்டிருந்தேன். ஆனால், இவரது நடவடிக்கையால் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளேன். நான் அவரை மிரட்டவில்லை. எனது கஷ்டம் குறித்துதான் அவரிடம் பேசினேன்,’’ என்றார்.

Related Stories: