ஹரியானாவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு படையின் நிறுவன நாள் விழா கொண்டாட்டம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

சண்டிகர்: ஹரியானா மாநிலம் மனேஸாரில் என்.எஸ்.ஜி என சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையின்  35வது நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றதோடு சாகசங்களையும் பார்வையிட்டார். நாட்டில் தீவிரவாதத்தை வேரறுக்க ராணுவத்தை போன்ற கட்டமைப்புடன் தேசிய பாதுகாப்பு படை ஏற்படுத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்கு  பின்னர் 1984ம் ஆண்டு என்.எஸ்.ஜி உருவாக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள என்.எஸ்.ஜி பிரதமர் முதல் நாட்டின் முக்கிய வி.வி.ஐ.பி-களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்து வருகிறது. பிளாக் கேட்ஸ் என பல தரப்பினராலும் அழைக்கப்படும் இந்த தேசிய பாதுகாப்பு படை நிறுவன நாள் விழா ஹரியானா மாநிலம் மனேசரில் உள்ள என்.எஸ்.ஜியின் பயிற்சி மையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று என்.எஸ்.ஜி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றதோடு அவர்களின் சாகசங்களையும் பார்வையிட்டார்.

அமித் ஷா பேச்சு:  

இதில் கலந்துகொண்ட அமித்ஷா தெரிவித்ததாவது, பயங்கரவாதம் சமூகத்தின் சாபமாகவும், வளர்ச்சிக்கு தடையாகவும் உள்ளது. பயங்கரவாத தாக்குதல்களால் நமது நாடு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆட்சி, பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்றுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து, இன்றைய காலகட்டத்தில் போர் காரணமாக பாதிப்புகள் இல்லையென்றாலும் கூட பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாதத்தால் நாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவை நீக்கிய தன் மூலம் அங்குள்ள பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் அங்கும் அமைதி ஏற்படும் என தெரிவித்தார். மேலும் நமது தேசியப் பாதுகாப்புப் படையினரால் இது போன்ற பயங்கரவாதச் சம்பவங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

Related Stories: