கடன் தொல்லையால் தற்கொலை செய்த 4 பேரின் உடல்கள் அடக்கம்: சோகத்தில் மூழ்கிய அண்ணனூர்

சென்னை: கடன் தொல்லையால் தற்கொலை செய்த 4 பேரின் உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. ஆவடி அடுத்த அண்ணனூர், சிவசக்தி நகர், 24வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (65). கட்டிட கான்ட்ராக்டர். இவரது மனைவி சுப்பம்மாள் (60). இவர்களுக்கு நாகராஜ் (35), ரவி (30) ஆகிய இரண்டு மகன்களும், முனியம்மாள் (33), ஜோதி (23),  கல்யாணி (25) ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இதில், மூன்று மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். நாகராஜ் மற்றும் ரவியின் மனைவிகள் கோபித்துக் கொண்டு தங்களது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதனால் இரண்டு மகன்களும்  தந்தையுடனே வசித்து வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மூன்றாவது மகள் கல்யாணி, தன் மகள்கள் சர்வேஸ்வரி (7), யோகேஸ்வரி (6) ஆகியோருடன் தந்தை கோவிந்தசாமியை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால்  மனைவி கல்யாணி, மகள்கள் சர்வேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரை அழைத்துச் செல்ல நேற்று மாலை மாமனார் கோவிந்தசாமி வீட்டுக்கு வந்தார்.

Advertising
Advertising

அங்கு, ஒவ்ெவாருவரும் ஒவ்வொரு திசையில் அசைவற்று கிடந்தனர். கல்யாணி, அவரது 2 மகள்களிடம் இருந்து மட்டும் முனகல் கேட்டுள்ளது. இதை பார்த்து ஆறுமுகம் அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்,  கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோரை தொட்டு பார்த்தபோது அவர்கள் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு கல்யாணி மற்றும் அவரது 2 மகள்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்தவர்களின் உடல்களை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் விசாரணையில், கோவிந்தசாமி தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடகு வைத்து 60 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.  அதற்கு மாதம் 51 ஆயிரம் கட்டவேண்டியிருந்தது. அதை இரண்டு மாதமாக கட்ட முடியாமல் தவித்துள்ளார்.  மேலும் குடும்ப செலவுக்காக நண்பர்கள், உறவினர்களிடமும் கோவிந்தசாமி பல லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் மகள் கல்யாணியிடமும் நகை மற்றும் பணத்தை கடனாக வாங்கியிருந்தார்.  அந்த வகையில் கடன்  80 லட்சத்துக்கும் மேல் சேர்ந்துள்ளது. இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். அதன்படி ேகாவிந்தசாமி, மனைவி, மகன்கள், மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் விஷம் குடித்தது தெரிந்தது. இதில் கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் இறந்தனர். கல்யாணி இரண்டு மகள்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.  தற்கொலை செய்து கொண்ட 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. அந்த 4 உடல்களும் அண்ணனூரில் உள்ள கோவிந்தசாமியின் உறவினர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. பின்னர் அண்ணனூர் சுடுகாட்டில் அவர்கள் உடல் அடக்கம்  செய்யப்பட்டது.

Related Stories: