நிலுவைத் தொகையை செலுத்தாததால் ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நோட்டீஸ்

புதுடெல்லி: சென்னை உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சப்ளையை நாளை முதல் நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 5ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளன. அதில் எரிபொருள் பெற்றதற்காக நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கோடி ரூபாயை ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி செலுத்த வேண்டும். இல்லையெனில் 11ம் தேதியுடன் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 6 முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு அளிக்கப்படும் எரிபொருள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவால் ஏர் இந்தியா நிறுவன விமானங்களில் பயணிக்கும் நபர்கள் விமான காலதாமதம், விமான ரத்து உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல எரிபொருள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்துவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் புனே, விசாகப்பட்டினம், கொச்சி, பாட்னா, ராஞ்சி, மொகாலி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானத்திற்கான எரிபொருள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தின. இதை தொடர்ந்து ஹைதராபாத், ராய்பூர் விமான நிலையங்களிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனால் அந்த முடிவை மட்டும் கைவிட்டன.

Related Stories: