வங்கி கடனை செலுத்தாததால் நாட்டில் முதல்முறையாக தனியார் விமானம் ஜப்தி

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் வங்கி கடனை திரும்ப செலுத்தாததால் நாட்டில் முதல்முறையாக தனியார் விமானம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. கொச்சியை சேர்ந்த விமானிகள் சூரஜ் ஜோஸ், சுதீஷ் ஜார்ஜ் வங்கியில் இருந்து கடந்த  2014ம் ஆண்டு ரூ.4.20 கோடி கடன் பெற்றனர். அத்தொகையில், அமெரிக்காவில் இருந்து இரண்டு கடல் விமானங்களை இறக்குமதி செய்து, கேரள அரசின் பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் `சீ பேர்டு என்ற தனியார் விமான  போக்குவரத்தை தொடங்கினர். இந்தியாவில் பறப்பதற்கு உரிய முறையான உரிமம் பெறாததால் இந்நிறுவனம் உள்நாட்டில் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஒரேயொரு முறை இலங்கைக்கு மட்டும் சென்று வந்தது. அதன்  பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஒருபகுதியில் நிறுத்தப்பட்டது.

இதனை பராமரிக்கும் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடன், வங்கி கடன் ஆகியவற்றை செலுத்தாததால் விமானம் ஜப்தி செய்யப்பட்டது. இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த ஆடிட் நிறுவனத்தின் அதிகாரி கே.கே. ஜோஸ் கூறுகையில்,  சர்பாசி சட்டம் 2002ன் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக வங்கி கடனை செலுத்தாமல் இருந்ததால் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கடல் விமானம் பறிமுதல் செய்யப்பட்டது, என்றார். வங்கி கடன் செலுத்தாமல் தனியார்  நிறுவனத்தின் விமானம் ஜப்தி செய்யப்படுவது நாட்டில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: