ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சி பிரிவில், தமிழக அணி தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம் - ரயில்வேஸ் அணிகள் மோதின. டாசில் வென்று பேட் செய்த ரயில்வேஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்தது. மணிஷ் ராவ் அதிகபட்சமாக 55 ரன் விளாசினார். பிரதம் சிங் 43, கேப்டன் கோஷ் 24, துருஷந்த் சோனி 20*, தேவ்தர் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.தமிழக அணி பந்துவீச்சில் அபராஜித் 4, எம்.அஷ்வின் 2, முகமது, நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழகம், 44.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்து தொடர்ச்சியாக 7வது வெற்றியை வசப்படுத்தியது.