3வது டி20 போட்டியில் இன்று பாகிஸ்தான்-இலங்கை மோதல்

லாகூர்: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, லாகூரில் இன்று நடைபெறுகிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன.லாகூரில் நடந்த முதல் டி20ல் இலங்கை அணி 64 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. அடுத்து 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. பானுகா ராஜபக்ச 77 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), ஷெஹன் ஜெயசூரியா 34, கேப்டன் தசுன் ஷனகா 27 ரன் விளாசினர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 19 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் சர்பராஸ் அகமது 26, ஆசிப் அலி 29, இமத் வாசிம் 47 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இலங்கை பந்துவீச்சில் பிரதீப் 4, ஹசரங்கா 3, உடனா 2, ரஜிதா 1 விக்கெட் வீழ்த்தினர். 35 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற இலங்கை அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. அடுத்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related Stories: