2 மாத வீட்டுக் காவலுக்குப் பின் முதல் முறையாக பரூக், உமர் அப்துல்லாவுடன் கட்சித்தலைவர்கள் சந்திப்பு: மெகபூபாவுக்கு இன்று வாய்ப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் 2 மாதங்களாக வீட்டுக் காவலில் உள்ள பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சியினர் நேற்று சந்தித்து பேசினர்.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து  கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்ட பின்னர், தேசிய மாநாட்டு கட்சியின்  தலைவர் பரூக் அப்துல்லா, துணை தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி  தலைவர் மெகபூபா முப்தி உள்பட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது  செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், பரூக் அப்துல்லா,  உமர் அப்துல்லாவை சந்திப்பதற்கு அக்கட்சியின் ஜம்மு மாநிலத் தலைவர்  தவீந்தர் சிங் ராணா ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் அனுமதி கோரினார்.  இதையடுத்து, மாநில அரசு அவர்களுக்கு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து,  தவீந்தர் சிங் தலைமையில் 15 பேர் கொண்ட குழு நேற்று ஹரி நிவாஸ் இல்லத்தில்  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லாவை சந்தித்து 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர்,  ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை  சந்தித்துப் பேசினர். பின்னர், தவீந்தர் சிங் ரானா அளித்த பேட்டியில், ‘‘இரு தலைவர்களும் உற்சாகத்துடன்  உள்ளனர். தடை, கடை அடைப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து கேட்டறிந்தனர். நடைபெறவிருக்கும்  உள்ளாட்சி தேர்தல் குறித்து இரண்டு பேரிடமும் ஆலோசிக்கப்பட்டது,’’ என்றார். இந்நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபாவையும் அவருடைய கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து பேச, காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: