நூற்றுக்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் இன்னும் நிரப்பப்படவில்லை: அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் சுணக்கம்

வேலூர்:   தமிழகத்தில் தேர்வு நிலை பேரூராட்சிகள், சிறப்பு நிலை பேரூராட்சிகள், முதல் நிலை  பேரூராட்சிகள் என மொத்தம் 528 பேரூராட்சிகள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், சோளிங்கர், அம்மூர், திருவலம், திமிரி, விளாப்பாக்கம், கலவை, பென்னாத்தூர், ஒடுகத்தூர், ஆலங்காயம், பள்ளிகொண்டா, நாட்றம்பள்ளி, உதயேந்திரம்  பேரூராட்சிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், சேத்துப்பட்டு, தேசூர், களம்பூர், கண்ணமங்கலம், கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், போளூர், புதுப்பாளையம், வேட்டவலம் என 6 பேரூராட்சிகள் உள்ளன.

கடந்த 5 ஆண்டு களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் அனைத்து  ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசுத் திட்டங்கள் அனைத்தும் சிறப்பு  அதிகாரியாக உள்ள செயல் அலுவலர்களின் ஒப்புதலோடு  நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்டம் உதயேந்திரம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட  பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல மாவட்டங்களில் 5க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள்  காலியாக உள்ளதாக உள்ளாட்சித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் காலியாக உள்ள செயல் அலுவலர்  பணியிட பொறுப்புகளை அருகாமையில் உள்ள பேரூராட்சிகளில் பணியாற்றும் செயல்  அலுவலர்கள் கூடுதலாக கவனித்து  வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொது சுகாதாரப்பணியின் கீழ், துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை, மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு பணிகளும், குடிநீர் வினியோகம், தெருவிளக்கு வசதி, சாலை  வசதி, கட்டிட அனுமதி  உள்ளிட்ட  பல அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மாநில அரசின் கீழ் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம், நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டம், உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் நிதி திட்டம், உள்கட்டமைப்பு பராமரிப்பு இடைவெளி நிரப்புதல் மற்றும் நடவடிக்கைகள் திட்டம்,  நபார்டு திட்டம், பாரம்பரிய நகர்ப்புற வளர்ச்சி திட்டம், சுற்றுலா வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை திட்டம், பூங்கா மேம்பாடு, பசுமை வீடு திட்டம், சிறப்பு சாலைகள் திட்டம் உட்பட 16 பணிகளும், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம்,  அம்ரூத் திட்டம், சுவட்ச் பாரத் திட்டம், 14வது நிதிக்குழு மானிய திட்டம் என பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

    இதுதவிர தற்போது மழைநீர் சேகரிப்பு திட்டம், மரக்கன்றுகள் நடும்பணி, அலுவலக நிர்வாகப்பணிகள் தவிர மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டங்கள், மக்கள் பிரச்னைகள் என  பல்வேறு பணிகளை கூடுதலாக கவனிக்கின்றனர். இதனால்  அத்தியாவசிய பணிகளை உரிய நேரத்தில் முடிக்க வழியின்றி திணறலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக செயல் அலுவலர் இல்லாத அருகில் உள்ள பேரூராட்சி நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டிய நிலையில் வாரத்தில் 2 அல்லது 3 நாட்களை ஒரு பேரூராட்சிக்கு என ஒதுக்கி பணியாற்றி வருகின்றனர். இதனால்  கோரிக்கை, புகார்  மற்றும் பிற தேவைகளை நிறைவேற்ற வரும் பொதுமக்கள்  அதிகாரிகளின்றி திரும்பிச் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால்  பிறப்பு, இறப்பு, புதிய வீடு கட்டும் பயனாளிகள், வீட்டுமனைகளுக்கு உரிமம்  உள்ளிட்ட பல்வேறு  சான்றிதழ்களை பெறமுடியாமல் பொதுமக்கள்  சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் வேறு நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கேற்ப அதற்கான ஆயத்தப்பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. செயல் அலுவலர்கள் இல்லாத நிலையில்  தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான பணிகளை கவனிப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, மாநில அரசு காலியாக உள்ள செயல் அலுவலர்  பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக  உள்ளது.

Related Stories: