ஆளில்லா விமானம் மூலம் பாக்., ஆயுதங்கள் அனுப்பிய வழக்கு: தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு

டெல்லி: அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளுக்கு, ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் அனுப்பப்பட்டது தொடர்பான வழக்கை மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கவுள்ளது. பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் மாவட்டத்தில் காலிஸ்தான்  ஜிந்தாபாத் போர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகளை சமீபத்தில் கைது செய்த அம்மாநில போலீசார் அவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், கைதுப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் செயற்கைகோள் செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆயுதங்கள் அனைத்தையும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்ஐ-யால் ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டது தெரியவந்ததாக கூறப்பட்டது.

மேலும் பஞ்சாப் மற்றும் அதனையொட்டியுள்ள அண்டை மாநிலங்களில் தொடர் தாக்குதலை நடத்தவும், தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்குமாறு பஞ்சாப் மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கவுள்ளது. விரைவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: