டாக்டர்கள் வர ரொம்ப ‘லேட்டாகுது’ தேவகோட்டை ஜிஹெச்சில் சிகிச்சைக்காக தினமும் தவம்

*நோயாளிகள் கடும் அவதி; நடவடிக்கை எடுக்கப்படுமா?

தேவகோட்டை:  தேவகோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் வருவது தாமதமாவதால் நோயாளிகள் நீண்டநேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய அவலம் உள்ளது. தேவகோட்டை தாலுகாவிற்கு பெரியாஸ்பத்திரி என்பது தேவகோட்டை நகரில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையாகும். இங்கு அன்றாடம் சிறுவர் சிறுமியர், கூலி வேலைக்கு செல்லும் ஏழை எளிய மக்கள், தினமும் வைத்தியம் பார்க்கும் முதியோர்கள் கர்ப்பிணிகள் என 500க்கும் குறையாத வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காலை 8.30மணி முதலே கூட்டம் கூடி விடும். பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக பைக்கட்டுடன் வரிசையில் நிற்பர். ஆனால் டாக்டர்கள் வருவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. காரணம் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஒரே ஒரு டாக்டர் மட்டும் காலை 9.15மணிக்கு வருவார். அதன்பின் 9.45 மணிக்கு மேல் 4 டாக்டர்கள் தங்களது அறைக்கு வருவர்.  அரசு டாக்டர்கள் அனைவருமே நகரில் மிகப்பெரிய அளவிலான மருத்துவமனைகள் நடத்தி வருவதால் அங்கு நோயாளிகளை கவனித்து விட்டு பின்னரே அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். 9,45மணிக்கு மேல் நான்கு டாக்டர்கள் தங்களது அறைக்கு வருவர். வந்த டாக்டர்கள் அனைவரும் கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் 10 நோயாளிகளை பார்த்து விடுவர்.

அதன்பின் ‘டீ டயம்’ எனக்கூறி நோயாளிகளை வெளியே நிறுத்தி சுமார் அரை மணிநேரம் கதவை சாத்தி விடுவர். அதன் பின் மீண்டும் வேகத்தை ஆரம்பித்து அரை மணிநேரத்திற்கு ஓரிரு டாக்டர்கள் மட்டும் இருக்கும் நோயாளிகளை பார்ப்பர். மற்ற டாக்டர்கள் சென்று விடுவர். இதனால் நோயாளிகள் சிகிச்சைக்காக மணிக்கணக்கில் காத்திருப்பதுடன், சிலசமயம் சிகிச்சை பெறாமலே வீட்டிற்கு செல்லும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் கூறுகையில், ‘மதுரை சந்திரன் நாட்டுப்புற பாட்டு ஒன்று பாடுவார்.

அல்லல்படும் சீக்காளியே அவதிப்படும் தாய்மார்களே ஆளாய் பறக்கும் பெரியோர்களே நில்லுங்க அரசு ஆசுபத்திரி கதையக் கொஞ்சம் கேளுங்க என்று பாடுவார். அந்தப்பாட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு முற்றிலும் பொருந்தும். எனவே அரசு கடும் நடவடிக்கை எடுத்து தேவகோட்டை அரசு மருத்துவமனையில் இயக்க முறையை மாற்ற வேண்டும்’ என்றார்.

Related Stories: