திருச்சி நகைக்கடையில் 13 கோடி நகைகள் கொள்ளை சம்பவம்,..5 மாநில போலீசை அதிரவைத்தகொள்ளை கும்பலின் தலைவன் முருகன்

திருவாரூ: திருச்சி நகைக்கடையில் 13 கோடி கொள்ளை சம்பவத்தில் 5 மாநில போலீசாரை அதிரவைத்த கொள்ளை கும்பலனின் தலைவனாக திருவாரூரை சேர்ந்த முருகன் செயல்பட்டுள்ளான். அவனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில், 13 கோடி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் திருவாரூரை சேர்ந்த முருகன் மூளையாக செயல்பட்டுள்ளான். இவனது கூட்டாளி, திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (35) போலீசிடம் நேற்று முன்தினம் பிடிபட்டான். அவன் முருகனை பற்றி பல்வேறு தகவல்களை கொடுத்தான். இந்த வழக்கில் கைதான சுரேஷ், பிரபல கொள்ளையன் முருகனின் (45) அக்கா மகன் ஆவார். இதனால் நகைக்கடை  சம்பவத்தில் முருகன் மூளையாக செயல்பட்டு இருக்கலாம் என போலீசார் முடிவு செய்திருப்பதால் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர். முருகன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் பகுதியில் சிறு, சிறு பொருட்களை திருடி வந்தான்.

தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் ஒருகட்டத்தில் போலீசார் இவனை சுற்றி வளைக்கவே அங்கிருந்து பெங்களூர் சென்றான். அங்கு கால்டாக்ஸி டிரைவராக தனது பணியை தொடங்கிய முருகன், அதே கால்டாக்சியில் தனது நண்பர் ஒருவரின் தங்கையான மஞ்சுளா என்பவரை திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருகிறான். அங்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் வரையில் டிரைவராக வேலை பார்த்துக்கொண்டே தனது கைவரிசையைக் காட்டத் துவங்கினான். இதனையடுத்து அங்கு கூட்டுறவு வங்கி உட்பட பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டான். அங்கு பெங்களூர் போலீசார் இவனை சுற்றிவளைக்கவே அங்கிருந்து தப்பித்து ஆந்திர மாநிலத்திற்கு சென்று அங்கேயும் தனது கைவரிசையை காட்டி வந்தான். இவன் நகைக்கடை, வங்கிகளில் கொள்ளையடிப்பதில் நம்பர் 1 கில்லாடி.

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி என 5 மாநிலங்களிலும் முருகன் பெயரை கேட்டால் போலீசாரே அதிர்ந்து போகும் அளவுக்கு இவனது கொள்ளைகள் இருந்து உள்ளது. இவன் மீது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் சுமார் நூறு வழக்குகள் உள்ளன. சொந்த ஊரை அடைமொழியாக்கி திருவாரூர் முருகன் என அழைக்கப்படும் இந்த திருடன் தமிழகத்தைவிட மற்ற மாநிலங்களில் “Most wanted accused” என்று தேடப்பட்டு வருபவன்.2014-ம் ஆண்டில் இருந்து 2015 வரை ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள வங்கிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு சைபராபாத் காவல் துறையினரை அதிரவைத்த முருகனும் அவனது கூட்டாளியும் தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.

கடந்தாண்டு ஜூன் மாதம் சென்னையில் ஒரு இடத்தில் தனது கைவரிசையை காட்டிய நிலையில் இந்த வழக்கில் முருகனை போலீசார் தேடவே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாகவே இருந்து வந்தான்.

இந்நிலையில் தான் கடந்த 2ம் தேதி அதிகாலையில் திருச்சியில் மெகா கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறியது. சுவரில் ஓட்டை போட்டு கொள்ளையடிக்கும் சம்பவத்தில் கைதேர்ந்தவனாக முருகன் இருந்துவரும் நிலையில் நகை்கடையில் கொள்ளை சம்பவத்திலும் இவன் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் அதனை உறுதி செய்யும் வகையில் அவரது அக்கா மகன் சுரேஷ் தனது நண்பர் மணிகண்டனுடன் தஞ்சை பகுதியிலிருந்து பைக் மூலம் 5 கிலோ எடை கொண்ட நகையை எடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவத்திற்கு முழுக்க முழுக்க முருகன் தான் முழு காரணமாக இருக்க முடியும் என்றும் அவனது ஸ்கெட்ச் மூலம்தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றியுள்ளது என்றும் தற்போது போலீசார் முடிவுக்கு வந்துள்ளதால் தப்பியோடிய முருகனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோட்டைவிட்ட திருவாரூர் போலீசார்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த முருகன் தனது தொழிலை மாற்றிக் கொண்டு பெரும் கொள்ளைகளில் ஈடுபட துவங்கினான். அதன்படி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மட்டுமின்றி சென்னையிலும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் அவனது சொந்த ஊர் திருவாரூர் என்றபோதும் இந்த பகுதியில் அவன் கைவரிசையை காட்டாததால் நமக்கு ஏன் வம்பு என்று கடந்த 20 ஆண்டு காலமாக திருவாரூர் போலீசார் காலம் கழித்து வந்துள்ளனர். மேலும் அவனை கர்நாடக மற்றும் ஆந்திர போலீசார் தேடி திருவாரூர் வரும்போது மட்டும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து முருகனை அவ்வப்போது பிடித்துக் கொடுப்பதும், அவனிடமிருந்து 10 கிலோ, 15 கிலோ என்ற அளவில் தங்க நகைகளை மீட்டு கொடுப்பதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற மெகா கொள்ளையில் ஈடுபட்டு வரும் கொள்ளையனை முழுமையாக பிடித்துக் கொடுத்து நிரந்தரமாக தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று திருவாரூர் போலீசார் இதுவரையில் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. 20 வருடங்களாக விட்ட கோட்டையை தற்போது பிடிக்கும் பணியில் திருவாரூர் போலீசார் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்டிக்கொடுக்காதசொந்த ஊர் மக்கள்

முருகன் தனது சொந்த ஊரான திருவாரூர் சீராதோப்பு பகுதியில் தனது இனத்தை சேர்ந்த உறவினர்கள் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருந்துவரும் நிலையில் தனது கொள்ளை பணத்திலிருந்து அடிக்கடி அந்த பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள், உடைகள் போன்றவற்றினை அவ்வப்போது அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே போலீசார் மட்டுமின்றி வெளி நபர் கூட யாரேனும் ஒருவர் முருகனை தேடி அங்கு சென்றால் அவனை காட்டிக் கொடுக்காமல் அப்பகுதி மக்கள் முருகனுக்கு விசுவாசமாக இருந்து வருகின்றனர்.

Related Stories: