ரஃபேல் போர் விமானத்தில் வரும் 8-ம் தேதி பறக்க உள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ரஃபேல் போர் விமானத்தில் வரும் 8ம் தேதி பறக்க உள்ளார். இந்தியா பிரான்ஸ் இடையே செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி இந்திய விமானப்படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்கள் டெஸால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படுகின்றன. இதில் முதல் விமானம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வரும் 8ம் தேதி பாரிஸில் வைத்து ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக மூன்று நாள் பயணமாக வரும் 7ம் தேதி அவர் பிரான்ஸ் செல்கிறார். முதல் ரஃபேல் போர் விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி இந்திய விமானப்படை நிறுவப்பட்ட நாளான அக்டோபர் 8ம் தேதி பாரிஸில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் ராணுவ உயரதிகாரிகள், டெஸால்ட் நிறுவன உயரதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து, விமானத்தை பெற்றுக் கொண்ட பின்னர் ராஜ்நாத் சிங் அதில் பறக்கவுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படையை சேர்ந்த குழு ஏற்கனவே பாரிஸ் சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து ரஃபேல் போர் விமானம் சக்தி வாய்ந்த போர் கருவிகள், ஏவுகணைகளை பொருத்தி பயன்படுத்த ஏற்றதாகும். ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளை இந்திய விமானப்படை ஏற்கனவே உருவாக்கியுள்ளது. விமானிகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸிடம் இருந்து வாங்கப்படும் 36 ரஃபேல் விமானங்களில் 18 விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுவப்படவுள்ளன. வியூகம் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானப்படைத்தளம் இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருந்து 220 கிலோ.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மீதமுள்ள 18 விமானங்கள் மேற்கு வங்கத்தில் ஹசிமாரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்படவுள்ளன. இந்த இரு விமானப்படை தளங்களிலும் 400 கோடி ரூபாய் செலவில் ரஃபேல் போர் விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டமைப்புகள், பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: