ஏர் இந்தியா ஊழல் வழக்கு இடைத்தரகர் தீபக் தல்வாரின் உதவியாளர் கைது : அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: ஏர் இந்தியா ஊழல் வழக்கில், இடைத்தரகர் தீபக் தல்வாரின் உதவியாளர் யாஷ்மின் கபூரை அமலாக்கத்துறை கைது செய்து 6 நாள் காவலில் எடுத்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் லாபகரமான வழித்தடங்கள் மற்றும் நேரங்கள் ஆகியவை ஐ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில் தனியார் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு ஏர் இந்தியாவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில், இடைத்தரகராக செயல்பட்ட தீபக் தல்வார், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இவரது நிறுவனத்துக்கு கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஏர் அரேபியா போன்ற விமான நிறுவனங்களிடமிருந்து ரூ.60.54 மில்லியன் டாலர் (ரூ.429 கோடி) லஞ்சப் பணம் பெறப்பட்டு விமான போக்குவரத்து துறை மற்றும் ஏர் இந்தியா அதிகாரிகள் பலருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.  

இந்தப் பணத்தில்தான் தீபக் தல்வாரின் உதவியாளர் யாஷ்மின் கபூர் டெல்லியில் வீடு வாங்கினார் என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இந்த வழக்கில் யாஷ்மின் கபூர் பெற்றிருந்த முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் கடந்த மாதம் ரத்து செய்திருந்தது. இதையடுத்து டெல்லி நீதிமன்ற வளாகத்தில் யாஷ்மின் கபூரை அமலாக்கத்துறை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதையடுத்து யாஷ்மின் கபூரை 6 நாள் காவலில் அனுப்ப டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுராதா சுக்லா பரத்வாஜ் உத்தரவிட்டார்.

Related Stories: