அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போர் காலத்திய விமானம் விபத்து: 7 பேர் பலி, 9 பேர் படுகாயம் என தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்திய பழமையான விமானம் விபத்தில் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு எதிராக குண்டுமழை பொழிய அமெரிக்க விமானப்படையால் போயிங் வி 17 ரக  போர் விமானங்கள் அனுப்பப்பட்டது. அதில் 18 விமானங்கள் மட்டும் அமெரிக்காவில் தற்போதும் இருப்பதாக கூறப்படும் நிலையில், பழங்கால விமானங்களை வாங்கி இயக்கி வரும் காலிங்ஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான வி 17 விமானம் அந்நாட்டு நேரப்படி புதன் அன்று காலை 9.45 மணியளவில் 10 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் புறப்பட்டது.

இந்த நிலையில், விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட பைலட்டுகள் உடனடியாக பிராட்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதிகோரியதாக விமான நிலைய ஆணைய இயக்குநர் கெவின் தெரிவித்துள்ளார். ஆனால் தரையை தொட்டதும் கட்டுப்பாட்டை இழந்து வெடித்து தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானதாகவும், தரையில் இருந்த 3 பேர் உட்பட 9 பேர் காயமடைந்ததாகவும், அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  மேலும் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் குழந்தைகள் யாரும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து பழங்கால விமானங்களை பயன்படுத்துவோருக்கு இதுவொரு எச்சரிக்கை என்றும், இனியாவது இதுபோன்ற விமானங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கனெக்டிகட் செனட்டர் கேட்டுக் கொண்டுள்ளார். எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பிராட்லி சர்வதேச விமான நிலையம், இந்த விபத்து காரணமாக சுமார் மூன்றரை மணிநேரம் வரை மூடப்பட்டது. பின்னர் ஒற்றை ஓடுதளம் விமான சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கவர்னர் லேமண்ட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: