இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் ரோகித் சர்மா அசத்தல் சதம்

விசாகப்பட்டினம்: இந்திய - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்டில் துவக்க வீரர் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் தடைபட்டது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் நேற்று விசாகப்பட்டிணத்தில் துவங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்ட ரோகித் சர்மா, இப்போட்டியில் முதன்முறையாக துவக்க வீரராக களமிறங்கினார். இவருடன் மயங்க் அகர்வாலும் துவக்க வீரராக களமிறங்கினார்.

இருவரும் துவக்கம் முதலே நிதானத்துடனும், மோசமான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விட்டபடியே இருந்தனர்.

சர்வதேச தரம் வாய்ந்த தென் ஆப்ரிக்க வேகங்களான ரபாடா, பிலாண்டர் பந்து வீச்சை கூட எளிதாக கையாண்டனர். 3 சுழற்பந்து வீச்சாளர்களும் சோபிக்கவில்லை. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது சதத்தை எட்டினார். இவருக்கு இணையாக விளையாடிய மயங்க் அகர்வால் தன் பங்குக்கு அரை சதம் விளாசினார்.  தேநீர் இடைவேளைக்கு சிறிது நேரத்துக்கு முன்பு மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 59.1 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 115 (அ.இ), மயங்க் அகர்வால் 84(அ.இ) களத்தில் இருந்தனர். இன்று மழை பெய்யாதபட்சத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ரன் மழை பொழியலாம்.

Related Stories: