நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில் மீண்டும் பேனர் கலாச்சாரத்தை புகுத்த அதிமுக அரசு முயற்சி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், மீண்டும் பேனர் கலாச்சாரத்தை புகுத்த அதிமுக அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் அரிய புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதை தமிழக காங்கிரஸ் தலைவர் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, ஏ.கே.செட்டியார் இயக்கிய காந்தி பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து, காந்தி பிறந்த நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர் வல்ல பிரசாத் முன்னிலை வகித்தார். மூத்த தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, கோபண்ணா, ஜெயக்குமார் எம்பி, முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன், ராணி, சிரஞ்சீவி, இரா.மனோகர், ரங்கபாஷ்யம், ஜி.கே.தாஸ், ஜான்சிராணி, சுமதி அன்பரசு, வக்கீல் சுதா, எஸ்.கே.நவாஸ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காந்தியின் வரலாற்று சிறப்புகள் பற்றி உரையாற்றினார்கள்.

 பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுப என்ற இளம்பெண் உயிரிழந்தது அனைவருக்கும் மிகப் பெரிய  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இனி சாலைகளில் எங்கும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.  இந்நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரம் வருகை தருகின்றனர். அவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக அரசு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளது. நீதிமன்றம் தடை செய்த பேனர் கலாச்சாரத்தை மீண்டும் புகுத்த அனுமதி கேட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: