350 கோடி ரூபாய் மதிப்பிலான ஐதராபாத் நிஜாம் சொத்து இந்தியாவுக்கே சொந்தம்: லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லண்டன்: லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் சொத்து  தொடர்பாக நடந்த வழக்கில், இந்தியாவுக்கு சாதகமாக லண்டன் நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனி  சமஸ்தானமாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க முயற்சி  மேற்கொள்ளப்பட்டது. அதை எதிர்க்கொள்ள பாகிஸ்தான் தரப்பில், நிஜாமுக்கு  ஆயுதங்கள் வழங்கப்பட்டன. 1948ம் ஆண்டு இந்திய ராணுவம் எடுத்த `ஆப்ரேஷன்  போலோ’ நடவடிக்கையின்போது, பிரிட்டனுக்கான பாகிஸ்தானின் ஆணையர் ஹபீப்  இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன்  வங்கிக் கணக்கில் ஐதராபாத்தின் ஏழாவது நிஜாமின் அமைச்சரவையில்  நிதியமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங், தங்களது அரசின் வசம் உள்ள  ஒரு மில்லியன் பவுண்டுகளை பாதுகாப்பாக வைக்கும் எண்ணத்தில் பரிமாற்றம் செய்தார். அது தற்போது 35 மில்லியன் பவுண்டுகளாக பெருகி  உள்ளது.  ரஹிம்தூலாவின் நாட்வெஸ்ட் வங்கி கணக்கில் இருக்கும் இந்த பணத்திற்கு  நிஜாமின் வாரிசுகள் மற்றும் பாகிஸ்தான் அரசு சொந்தம் கொண்டாடியது. இதுதொடர்பாக லண்டன்  நீதிமன்றத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக  வழக்கு விசாரணை நடந்து வந்தது.  இந்த விவகாரத்தில் நிஜாமின் வாரிசுகள்  இந்திய அரசுடன் இணைந்து வழக்கை நடத்தி வந்தனர். இதனை லண்டன்  நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்நிலையில், கடந்த எழுபது ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கில், லண்டன் நீதிமன்றம்  நிஜாமின் வாரிசுகளுக்கும் இந்தியாவுக்கும் சாதகமாக நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது. லண்டன்  ராயல் நீதிமன்றத்தின் நீதிபதி மார்கஸ் ஸ்மித் தனது தீர்ப்பில், `‘இந்த  பணமானது ஏழாவது நிஜாமுக்கும், அவரது பேரப் பிள்ளைகளுக்கும், எட்டாவது  நிஜாமுக்கும் அவரது இளைய தம்பிக்கும், இந்தியாவுக்கும் உரியது’’ என தீர்ப்பு  வழங்கி உள்ளார்.இதுகுறித்து நிஜாம் தரப்பில் ஆஜரான விதர்ஸ்  வேர்ல்ட்வைடு சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பால் ஹெவிட்  கூறுகையில், ``தீர்ப்பால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்த  வழக்கு தொடங்கியபோது சிறுவனாக இருந்த எங்களது மனுதாரருக்கு தற்போது 80  வயதாகிறது’’ என்றார்.

பாகிஸ்தானுக்கு பின்னடைவு

இந்த  வழக்கின் தீர்ப்பு நிஜாமின் வாரிசுகளுக்கும் இந்தியாவுக்கும் கிடைத்த  மிகப்பெரிய வெற்றியாகவும் அதே சமயம் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகவும்  கருதப்படுகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்ட  அறிக்கையில், ``இந்த தீர்ப்பு பற்றி பாகிஸ்தான் அரசு அனைத்து  கண்ணோட்டத்திலும் ஆராய்ந்து வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: