மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முடக்கத்தால் மக்கள் விஷம் குடித்து இறப்பார்கள்: வாடிக்கையாளர் டிவிட்டுக்கு நிதி அமைச்சர் எச்சரிக்கை

மும்பை: மும்பையில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி) கடந்த 1984ல் தொடங்கப்பட்டது. இந்த வங்கி டெல்லி, கர்நாடகா, கோவா, குஜராத், ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 137  கிளைகளுடன் நாட்டிலேயே சிறந்த 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், இவ்வங்கி கடந்த 6 மாதமாக கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மும்பை நிறுவனத்திற்கு கொடுத்த 4,300 கோடி கடன் வராக்கடனாக மாறியது.  இது குறித்து வங்கியின் முன்னாள் இயக்குனர் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, ரிசர்வ் வங்கி பிஎம்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. வாடிக்கையாளர்கள் அடுத்த 6 மாதத்திற்கு வெறும் 1000 மட்டுமே எடுக்க முடியும் என உத்தரவிடப்பட்டு பின்னர் 10,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதே போல்,  புதிதாக எந்த கடனும் வழங்கக் கூடாது, டெபாசிட்களும் போடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர்களும், டெபாசிட் செய்துள்ளவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அரசின் செய்தித்துறை அறிக்கை வெளியிட்டது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் பதிவிட்டார். அதில், ‘பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி விவகாரம்  குறித்து பிஐபி அறிக்கை வெளியிட்டுள்ளது. டெபாசிட்தாரர்கள் ஏதேனும் குறைகள், சந்தேகங்கள் இருந்தால் www.pmcbank.com என்ற இணையதளத்திலும், 1800223993 என்ற இலவச தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்,’ என கூறி  இருந்தார்.

இதற்கு விரக்தி அடைந்த வாடிக்கையாளர் ராகேஷ் பட் என்பவர் விடுத்த பதில் டிவிட்டில், ‘இதெல்லாம் ஒன்றும் புதுதில்லை. விரைவான தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். இப்பிரச்னையை தீர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றை அரசும்,  ரிசர்வ் வங்கியும் மேற்கொள்ள வேண்டும். தயவு செய்து இதை ஒரு சவாலாக ஏற்று, உதவுங்கள். இல்லாவிட்டால், மக்கள் விஷம் குடித்து இறக்க நேரிடும்,’ என எச்சரிக்கை விடுத்தார்.உடனடியாக அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர், ‘இதுபோன்ற அதிதீவிர விஷயங்களை (தற்கொலை முடிவு) பற்றி குறிப்பிடுவதையோ, எழுதுவதையோ, பேசுவதையோ தவிர்க்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் நிதி அமைச்சகத்தின் கீழ்  வராது. அவை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன’ என எச்சரிக்கும் வகையில் கூறியுள்ளார்.

வங்கிகளுக்கு ஆபத்து இல்லை

சில வங்கிகள் திவால் ஆகும் நிலையில் இருப்பதாக தகவல் பரவியதால், பங்குச்சந்தையில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி உட்பட சில வங்கி பங்குகள் மதிப்பு 1.3 சதவீதம் வரை சரிந்தது. இதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி  ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், ‘கூட்டுறவு வங்கிகள் உட்பட சில வங்கிகள் தொடர்பாக பரப்பப்படும் தகவல்கள் டெபாசிட்தாரர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இது உண்மையல்ல. அச்சம் கொள்ள தேவையில்லை. இந்திய வங்கிகள்  அமைப்பு மிக பாதுகாப்பாகவும் ஸ்திரமாகவும் உள்ளது. புரளிகளை நம்ப வேண்டாம்’’ என தெரிவித்துள்ளது.

Related Stories: