கோபி நகராட்சியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 19 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: அரசுப்பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் விரைந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டுவைத்தார்.

தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், 280 கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மற்றொரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில், 298 பயனாளிகளுக்கு 2 கோடியே 11 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்களையும், காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு மாவட்டம் சித்தோடிலிருந்து - கோபிச்செட்டிப்பாளையம் வரை 350 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும் கோபி நகராட்சியில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 19 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: