திருமங்கலத்தில் கானல் நீராகி வரும் பாதாள சாக்கடை திட்டம்: ஊருக்குள் 30 சதவீதமே இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி

திருமங்கலம்: திருமங்கலம் நகருக்கான பாதாள சாக்கடை திட்டம் கானல்நீராகி வருவது பொதுமக்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. மதுரை மாவட்டத்தின் தென்பகுதி நுழைவுவாயிலாக திருமங்கலம் நகராட்சி அமைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 55 ஆயிரமாக இருந்த மக்கள் தொகை தற்போது 65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த 1977ல்  நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருமங்கலத்தில் தென்பகுதியான முனிசீப் கோர்ட் ரோடு முதல் விருதுநகர் ரோட்டிலுள்ள ஆறுகண் பாலம் வரையில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. 1962ல் காமராஜர்  முதல்வராக இருந்த காலகட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு இன்று வரையில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் நகரம் அதற்குபின்பு பன்மடங்கு விரிந்து வளர்ச்சி அடைந்துள்ளது.  

தற்போது பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, சோழவந்தான் ரோடு, காமராஜர்புரம், கற்பகம்நகர், புதுநகர், அசோக்நகர், சியோன்நகர் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. அதாவது நகரில் கிட்டதட்ட  70 சதவீதம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கிடையாது. சுமார் 30 சதவீதம் பகுதியில் மட்டுமே உள்ளது. தற்போது பாதாள சாக்கடை திட்டம் இல்லாத பகுதிகளில் வாறுகால்களில் தேங்கும் கழிவுநீரால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன், கொசுத்தொல்லை அதிகளவில் எழுந்து ேநாய்களை பரப்பி வருகின்றன. இப்பகுதிகளில் பாதாள  சாக்கடை திட்டம் அமைந்தால் கழிவுநீர் வெளியே ஓடாது. சேகரமாகும் அனைத்து கழிவுநீரும் மறுசுழற்சி மூலமாக சுத்திகரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்களில் இயற்கை உரமாக மாற்றப்படும். ஆனால் பல்வேறு சிக்கல்களால்  திருமங்கலத்திற்கு இந்த திட்டம் இதுவரையில் கானல்நீராகவே இருந்து வருவது வேதனையளிப்பதாக உள்ளதாக நகர மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருமங்கலம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் மதுரபாண்டி கூறும்போது, ‘‘திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றினால் சுகாதாரம் சீராகும். கழிவுநீர் மட்டுமின்றி இறைச்சிக்கடை கழிவுகள், காய்கனி கழிவுகள்  உள்ளிட்ட அனைத்தும் இதில் சென்றுசேரும் போது சுகாதாரம் மேம்பாடு அடையும். தற்போது இந்த திட்டம் இல்லாததால் நகரில் நிலத்தடிநீர் மட்டம் மாசுடைந்து தரம் குறைந்து வருகிறது. பாதாள சாக்கடை அமலானால் தண்ணீரின் தரம்  பற்றிய அச்சம் தேவையில்லை. மக்களுக்கு கூடுதல் வரிசுமை என்றாலும் பாதாள சாக்கடை திட்டத்தை திருமங்கலம் நகரமக்கள் நீண்டநாள்களாக எதிர்ப்பார்த்து காத்திருகின்றனர்’’ என்றார்.

சிக்கல் இருக்கு நகராட்சி ஒப்புதல்: நகராட்சி நிர்வாகத்தில் கேட்ட போது, ‘‘தற்போது திருமங்கலம் மக்கள் தொகையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது. 1962ல் இணைப்பு பெற்றவர்களுக்கு முதல்முறையாக இந்தாண்டுதான் வரி  விதித்துள்ளோம். இதனால் நகராட்சிக்கு வருவாய் அதிகரித்துள்ளது. நகராட்சியின் அனைத்து பகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தோராயமாக திருமங்கலம் முழுவதும் பாதாள  சாக்கடை திட்டத்தை கொண்டுவர ரூ.40 கோடியாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் எழும்.  மேலும் வாடை அதிகரித்தால் ஒருசிலர் என்ஜிடி எனப்படும் தேசிய  பசுமை தீர்ப்பாயத்தில் புகார் தெரிவித்து விடுகின்றனர். இதுபோல் ஒரு சில நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு பிரச்னை வந்துள்ளது. இருப்பினும் விரைவில் நமது நகராட்சியிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த உரிய  நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக இடங்களை அளவீடு செய்து பாதாள சாக்கடை திட்டபணிகள் விரைவில் துவக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: