தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வை அனைவரும் ஏற்பார்கள்: ப.சிதம்பரம் டுவிட்

டெல்லி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வு மூலம் உயர் பதவிகளான துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட  வேலை வாய்ப்பு அதிகாரி,  மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட இடங்களை நிரப்பி வருகிறது. அதே போல, குரூப் 2 தேர்வு மூலம் வருவாய் துறை அதிகாரி, வணிகவரித்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரி, தொழில் துறை  அதிகாரி, கல்லூரி கல்வித்துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி வருகிறது. குரூப் 2ஏ தேர்வு மூலம் அரசின் அனைத்து துறைகளில் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆண்டு தோறும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ(நேர்முக  தேர்வு அல்லாத பதவி) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தேர்வாணையம் ஒரு தேர்வை அறிவித்தால் ஒரு பதவிக்கு சுமார் 250 பேர் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. அந்தஅளவுக்கு போட்டியும், வேலை இல்லா திட்டாட்டமும் நிலவி வந்தது. டிஎன்பிஸ்சி தற்போது குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வில்  பல்வேறு மாற்றங்களை அதிரடியாக கொண்டு வந்துள்ளது. குறிப்பாக குரூப் 2, குரூப்2 ஏ பாடத்திட்டத்தில் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, முதலில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில்  100 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு 150 மதிப்பெண்களும், பொது அறிவியலில் 100 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு 150  மதிப்பெண் என மொத்தம் 200 கேள்விகளுக்கு என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தற்போது, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, காலம் காலமாக கேட்கப்பட்டு வந்த பொது தமிழ் தற்போது நீக்கப்பட்டுள்ளது. தமிழ் நீக்கப்பட்டு பொது அறிவில்(பட்டப்படிப்பு தரத்தில்) 175 கேள்விகளும், திறனறிவு மனக்கணக்கு  நுண்ணறிவு(10ம் வகுப்பு தரப்பில்) 25  கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் என்று புதிய  பாடத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் இந்த புதிய அறிவிப்பால் தமிழ் மொழி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு  இனி பணி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பணியிடங்களிலும் வெளிமாநிலத்தவரை சேர்ந்தவர்கள்  பணியமர்த்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மாநில அரசு நடத்தும் தேர்விலே தாய் மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது தேர்வு எழுதுபவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் இந்த  புதிய அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள் என டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் உதவியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: