கர்நாடகாவில் 15 பேரவை தொகுதிகளுக்கு டிச. 5ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டபேரவை  தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ், மஜத கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், இவர்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். இதை எதிர்த்து பதவி பறிக்கப்பட்ட  17 பேரும் உச்ச நீதிமன்றத்தில்   வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், காலியாக உள்ள இந்த 17 தொகுதிகளில் இரண்டை தவிர, மற்ற  15 தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2 தொகுதிகளில் தேர்தல் நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்க வே தடை விதித்துள்ளது. இதற்கிடையில், ‘இடைத்தேர்தலில் தங்களையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் இல்லையெனில்,  வழக்கு விசாரணை முடியும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்,’ என்று தகுதி நீக்க எம்எல்ஏ.க்கள் முறையிட்டனர்.

இதையேற்ற உச்ச நீதிமன்றம் வழக்கு, விசாரணை முடியும் வரை 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக் கூடாது என நேற்று முன்தினம் தடை விதித்தது. இந்நிலையில், இந்த   15  தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறும்  என  இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று  அறிவித்தது. அதன்படி, 15 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 11ம் தேதி தொடங்குகிறது. வேட்பு  மனு தாக்கல் செய்வதற்கு 18ம் தேதி கடைசி நாள். 19ம் தேதி வேட்புமனு  பரிசீலனை நடக்கும். 21ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுவதற்கும் கடைசி நாளாகும்.  டிசம்பர் மாதம் 5ம் தேதி வாக்குப்பதிவும், அதை தொடர்ந்து  டிசம்பர் 11ம்  தேதி வாக்கு  எண்ணிக்கையும் நடைபெறுகிறது.  ஏற்கனவே அறிவித்தபடி  வேட்பு மனுதாக்கல் செய்தவர்களின் மனுக்களும் பரிசீலனையின் போது  எடுத்துக் கொள்ளப்படும்  எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: