20 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்ட தினைக்குளம் ஊரணி

கீழக்கரை :  திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளத்தில் 20 ஆண்டுகளாக தூர்வாராத பெரிய ஊரணியை தினைக்குளம் ஜமாஅத் சார்பில் ரூபாய் 10 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கியது. திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தினைக்குளம் அரசு மேல் நிலைப்பள்ளியின் எதிரில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஊரணி உள்ளது. இந்த ஊரணி இப்பகுதி மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்தது.

ஊரணியை கடந்த 20 வருடங்களாக துர்வாராததால் தற்போது வறண்டு போய் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீருக்கு கடும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் அரசு குடிமராமத்து என்ற பெயரில் இந்த ஊரணியை தூர்வாருவதற்கு ரூபாய் 1 லட்சம் ஒதுக்கியுள்ளதாக கூறி தூர்வாரும் பணியை தொடங்கினர். இதை கண்டதும் தங்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறபோகிறது என்ற எண்ணத்தில் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்தப்பணி கண்துடைப்பாக நடந்து முடிந்தது. ஊரணியில் மையப்பகுதியில் மட்டும் சிறிதளவு தோண்டி அந்த மண்ணை கூட அங்கிருந்து அகற்றாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு வந்த நிதி முடிந்து விட்டது என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து தினைக்குளம் ஜமாஅத் தலைவர் முகம்மது அலிஜின்னா, செயலாளர் முகம்மது ரபீக் ஆகியோர் கூறுகையில், ‘தினைக்குளம் பெரிய ஊரணியை தினைக்குளம் ஊராட்சி மக்கள் மட்டுமின்றி சேதுக்கரை, களிமண்குண்டு உள்ளிட்ட ஊராட்சி மக்களுக்கும் பயன்பட்டு வந்தது. மேலும் குளிப்பதற்கு மட்டுமில்லாமல் குடிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஊரணியை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தூர்வாராமல் இருந்ததால் அனைத்து தரப்பு மக்களும் தண்ணீருக்காக பெரும் சிரமம் அடைந்து வந்தனர். அரசு தரப்பில் தூர்வாருவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தோம் எங்களின் எதிர்பார்ப்பு பொய்த்து போனது. இனி அதிகாரிகளிடம் பேசி பலன் இல்லை என்பதை உணர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஊர் மக்களிடம் ரூபாய் 10 லட்சம் நிதியை வசூல் செய்தனர்.

இந்த நிதியை வைத்து ஜமாஅத் சார்பில் ஊரணியை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளோம். ஆனால் இந்த நிதி ஊரணியை முழுவதுமாக தூர்வாருவதற்கு முடியாது. ஆகவே மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு நிதியை இந்த ஊரணியை தூர்வாருவதற்கு ஒதுக்கி இந்த மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’என்றனர்.

Related Stories: