மரடு அடுக்குமாடி குடியிருப்புகளை 3 மாதத்திற்குள் இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு; வசிப்போருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு

புதுடெல்லி: கேரளாவில் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள அரசு இடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே குடியிருப்புகளை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மரடு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க 3 மாதம் அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை வித்தது. கேரள மாநிலம் கொச்சி மரடு  பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அபார்ட்மெண்டுகள் சுற்றுச்சூழல் விதிகளை மீறி  கட்டியதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அபார்ட்மென்டுகளை  இடிக்க கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இதுதொடர்பாக எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பலமுறை உச்சநீதிமன்றம் கேரள அரசை கடுமையாக எச்சரித்தும் கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  உடனடியாக அந்த கட்டிடங்களை இடிக்காவிட்டால கேரள அரசு தலைமை செயலாளரை கைது  செய்ய உத்தரவிட வேண்டியது வரும் என உச்சநீதிமன்றம் எச்சரித்தது. இதையடுத்து  4 குடியிருப்புகளையும் இடிக்கும் நடவடிக்கையை கேரள அரசு தொடங்கியது.

இதற்கிடையே  அடுக்குமாடி குடியிருப்பை இடிப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி அக்டோபர் 11ம் தேதி முதல் அபார்ட்மென்ட் இடிக்கும் பணி தொடங்கும் என்றும்,  அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மரடு அடுக்குமாடி குடியிருப்புகளை கேரள அரசு இடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே குடியிருப்புகளை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்தது. அப்போது கேரள அரசு சார்பில் 3 மாதம் அவகாசம் கோரப்பட்டது. இதனையேற்று கொண்ட உச்சநீதிமன்றம் மரடு குடியிருப்புகளை 3 மாதத்திற்குள் இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கட்டிடங்களை இடிக்கும் பணி மற்றும் நிவாரணம் அளிக்கும் பணியை கண்காணிக்க குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. மரடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரடு அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போரை தவிக்கவிட வேண்டும் என்பது தங்கள் நோக்கம் அல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கடலோரத்தில் விதிகளை மீறி கட்டடம் கட்டி இருப்பது குறித்தே அக்கறை கொள்வதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: