காவிரி ஆணையத்தின் 16வது ஒழுங்காற்று குழு கூட்டம்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்கள் புள்ளி விவரங்கள் தாக்கல்

புதுடெல்லி: காவிரி ஆணையத்தின் 16வது ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதையடுத்து தற்போதைய நிலவரம் குறித்து தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களும் நீர் பங்கீடு குறித்த புள்ளி விவரங்களை தாக்கல் செய்தன.

    காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அதன் ஒழுங்காற்று குழுவின் 16வது கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் உள்ள சேனா பவனில் நேற்று நடந்தது. இதில் தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தின் சார்பாக  திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மாநிலங்களில் உள்ள அணை பராமரிப்பு, அதற்கான நடைமுறைகள், அணை பாதுகாப்பு ஆகியவை குறித்த அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உட்பட அந்தந்த மாநில பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்கள் மாநிலத்தின் தரப்பு புள்ளி விவரங்கள் மற்றும் கோரிக்கைகளை அறிக்கையாக குழு முன்னிலையில் தாக்கல் செய்தனர்.  கூட்டத்தின் முடிவில் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார் நிருபர்களிடம் கூறுகையில், “காவிரியில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள அணைகளில் நீர்வரத்து சீராக உள்ளது. மேலும் தற்போது கர்நாடகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர் பங்கீட்டில் பிரச்னை இருப்பதாக தெரியவில்லை. நான்கு மாநில அரசுகள் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் அக்டோபர் 10ம் தேதி பெங்களூருவில் நடத்த திட்டமிட்டுள்ளது’’ என்றார்

Related Stories: