பாலியல் புகாருக்குள்ளான முன்னாள் மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தா எங்கள் கட்சியின் உறுப்பினரே இல்லை..: பாஜக தகவல்

லக்னோ; பாலியல் புகாருக்குள்ளான முன்னாள் மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தா எங்கள் கட்சியின் உறுப்பினரே இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி தகவல் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சின்மயானந்தா(73) மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறினார். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சின்மயானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிறப்பு விசாரணை குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமித்தது. இந்நிலையில், சின்மயானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் அந்த மாணவி சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் சின்மயானந்தா கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டாலும் 2 நாட்கள் மட்டுமே சிறையிலிருந்த அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்படாமல், மிரட்டி பாலியல் உறவு கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சின்மயானந்தா எங்கள் கட்சியின் உறுப்பினரே இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச பாஜக செய்தித்தொடர்பாளர் ஹரிச்சந்திர ஸ்ரீவாஸ்தவா, சுவாமி சின்மயானந்தா இனி பாஜகவின் உறுப்பினரே கிடையாது. எங்கள் கட்சியின் பதிவேடுகளை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், அவர் எப்போதிருந்து உறுப்பினர் அல்ல என்பதை சொல்ல இயலாது. பாஜகவில் இல்லாத போது அவரை பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். சுவாமி சின்மயானந்தா, பாரதிய ஜனதா சார்பில் 3 தடவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். வாஜ்பாய் அரசில் இணை மந்திரியாக பதவி வகித்துள்ளார். இருப்பினும் அவர் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய நிலையில் அவரால் கட்சிக்கு கெட்ட பெயர் வரும் என்பதால், அவரை கட்சியின் உறுப்பினரே கிடையாது என்று சொல்லி பாஜக விலக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: