விஜய் ஹசாரே டிராபி: சர்வீசஸ் அணியை வீழ்த்தியது தமிழகம்: 212 ரன் வித்தியாசத்தில் அசத்தல்

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 212 ரன் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியை அபாரமாக வென்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சர்வீசஸ் அணி முதலில் பந்துவீசியது. தமிழக அணி தொடக்க வீரர்கள் முகுந்த் 1 ரன், ஜெகதீசன் 14 ரன்னில் வெளியேறினர். சாய் கிஷோர் 15, அபராஜித் 17  ரன்னில் பெவிலியன் திரும்ப, தமிழகம் 15 ஓவரில் 55 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், ஹரி நிஷாந்த் - கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 144 ரன் சேர்த்தது. ஹரி நிஷாந்த்  73 ரன் (71 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 95 ரன் (91 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஷாருக் கான் 23, முருகன் அஷ்வின் 6 ரன்னில் வெளியேற, தமிழக அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது. முகமது 36 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), விக்னேஷ் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  சர்வீசஸ் பந்துவீச்சில் வருண் சவுத்ரி, ரஜத் பாலிவல் தலா 2, பகதூர், நரங், அர்ஜுன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 295 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சர்வீசஸ் அணி, அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் 19.1 ஓவரில் 82 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. நகுல் வர்மா 20, ராகுல் சிங்  17, நகுல் ஷர்மா 14, ரவி சவுகான் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

தமிழக அணி பந்துவீச்சில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 9.1 ஓவரில் 41 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். முகமது 3, நடராஜன், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தமிழக அணி 212 ரன் வித்தியாசத்தில் இமாலய  வெற்றியை வசப்படுத்தியது. தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த தமிழகம் 8 புள்ளிகளுடன் சி பிரிவில் முன்னிலை வகிக்கிறது. அடுத்து தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை பீகார் அணியுடன் மோதுகிறது.

Related Stories: