ஹவ்டி மோடி நிகழ்ச்சியை புகழ்ந்த மிலிந்த் தியோரா மீது சோனியா அதிருப்தி

புதுடெல்லி: காங்கிரஸ் நிர்வாகி மிலிந்த் தியோராவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளது காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   காங்கிரஸ் கட்சியின் மும்பை மாநகர தலைவராக இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் மிலிந்த் தியோரா. இவர் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான முரளி தியோராவின் மகன்.   பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஹூஸ்டன் நகரில் கடந்த 22ம் தேதி நடந்த 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்ற ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அதிபர் டிரம்புடன் இணைந்து பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, அமெரிக்காவின் அடுத்த  தேர்தலிலும் அதிபர் டிரம்ப் வெற்றி வாகை சூடுவார் என பேசினார். இந்திய பிரதமராக அமெரிக்கா சென்றுள்ள மோடி, டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், இந்திய வெளியுறவுக் கொள்கையையே சிதைத்துவிட்டார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மிலிந்த் தியோரா பிரதமர் மோடியின் ஹவ்டி மோடி நிகழ்ச்சியை புகழ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘எனது தந்தை முரளி தியோரா இந்திய பிரதமர்கள் மற்றும் அமெரிக்க அதிபர்களுடன் இணைந்து பணியாற்றியவர். பிரதமர் மோடியின் அமெரிக்க உரை ராஜதந்திர நடவடிக்கை’ என கூறியுள்ளார்.

தன்னை பாராட்டி கருத்து தெரிவித்த மிலிந்த் தியோராவுக்கு  மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தியோராவின் இந்த செயல்பாடு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: