பெரம்பலூர் அருகே பாதை பிரச்னையில் தீக்குளித்த மாமியார் கருகி சாவு மருமகளுக்கு தீவிர சிகிச்சை: அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு

பாடாலூர்: பாதை பிரச்னையில் தீக்குளித்த மாமியார் உயிரிழந்தார். மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் ஊராட்சிக்குட்பட்ட மேலஉசேன் நகரம் கிராமத்தில் சீமான்குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் போர்வெல் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அருகே, மற்றொரு போர்வெல் அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு மேலஉசேன் நகரம், கீழேஉசேன் நகரம் ஆகிய பகுதிகளுக்கு ஊராட்சி மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 போர்வெல்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி சுற்றுசுவர் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்பின் பகுதியில் ராமதாஸ் மனைவி பூங்கொடி (56) என்பவர் வீடு கட்டி வசித்து வந்தார்.

இந்நிலையில் போர்வெல் போடப்பட்டு சுற்றுச்சுவர் அமைந்துள்ள இடம் வீட்டிற்கு செல்லும் பாதை என கூறி நீதிமன்றத்தில் பூங்கொடி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் பூங்கொடிக்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அல்லிநகரம் ஊராட்சி சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மின் மோட்டார் பழுதாகிவிட்டதால் குடிநீர் சப்ளை செய்யமுடியவில்லை. இதையடுத்து மேலஉசேன் நகரம் கிராம மக்கள், தங்களுக்கு குடிநீர் வேண்டும் என ஆலத்தூர் யூனியன் அலுவலகத்தில் கூறினர். இதையடுத்து அதிகாரிகள் உத்தரவின் பேரில், கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய நேற்றுமுன்தினம் மாலை மின்மோட்டார் அமைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மின்மோட்டார் பொருத்தினால் தீக்குளிப்போம் என ராமதாஸ் மனைவி பூங்கொடி, மருமகள் தங்கலட்சுமி (33) இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். உடல் முழுவதும் தீப்பற்றி எரிய அவர்கள் அங்குமிங்கும் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரையும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நள்ளிரவில் பூங்கொடி இறந்தார். தங்கலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து குன்னம் போலீசார் விசாரித்து, ஆலத்தூர்  துணை வட்டார வளர்ச்சி  அலுவலர் சங்கரன், ஊராட்சி செயலாளர் கலையரசி,  முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன், டேங்க் ஆபரேட்டர் சுப்ரமணி, எலக்ட்ரீசியன்  சுப்ரமணியன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

Related Stories: