திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வெள்ளியூர் தடுப்பணை உடைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை கொட்டியுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளியூர் பகுதியில் தடுப்பணை இருந்தும், சேதமடைந்துள்ளதால் மழைநீர் கடலுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.பூண்டி ஏரியில் இருந்து வெள்ளியூர், தாமரைப்பாக்கம் வழியாக உபரிநீர் வங்கக்கடலுக்கு செல்லும் வகையில் கொசஸ்தலை ஆறு செல்கிறது. இதில், வெள்ளியூர் பகுதியில் மழைநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.  நாளடைவில் பலவீனமான அந்த அணைமுற்றிலும் சேதமடைந்துள்ளது.

இதனால், மாவட்டத்தில் நல்ல மழை பெய்தும், தண்ணீரானது சேமிக்க வழியின்றி வீணாக கடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் தண்ணீர் இருந்தால், இங்கு பசுமை செழிக்கும்  என்று கூறித்தான் தடுப்பணை கட்டினார்கள். இங்கு தண்ணீர் நின்றால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், திருவள்ளூர் நகர மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும். மேலும், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், விளாப்பாக்கம்,  ராமராஜகண்டிகை ஆகிய பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையும் தீரும். விவசாயிகளும் பயனடைவார்கள்.

தடுப்பணை முற்றிலும் சேதமடைந்துள்ளதால், இங்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீரின் அளவும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், விவசாயமும் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை  பெய்திருப்பதால் நிலைமையை ஓரளவுக்கு சமாளித்து வருகிறோம். இந்த தடுப்பணையை விரைவில் சீரமைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘போதிய நிதி  இல்லாததால்தான், தடுப்புகளை கட்ட முடியவில்லை. நீர்நிலைகளை பராமரிக்க குறைந்தளவே பணம் ஒதுக்கப்படுகிறது. அது நீர்நிலைகளை தூர் வாருவதற்கே போதுமானதாக இல்லை. ஒவ்வொரு ஆண்டும், `கூடுதல் நிதி ஒதுக்குங்கள்’ எனக்  கூறி வருகிறோம். ஆனால் ஒதுக்குவதில்லை’ என்றார். எது எப்படியோ, இயற்கை தரும் கொடையையும் சேமிக்க முடியாமல் இருப்பதுதான் வேதனை.

Related Stories: