புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி: 3 மாத சம்பள பாக்கியை வழங்கியது அம்மாநில அரசு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கியை அரசாங்கம் வழங்கியது. நிலுவை ஊதியம், போனஸ் கேட்டு கடந்த 4 நாட்களாக புதுச்சேரி அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், 3 மாத சம்பள பாக்கியை புதுச்சேரி அரசு வழங்கியுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் இருந்தது. அதேபோல கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட தீபாவளி போனஸ் 11,000 ரூபாயை தரகோரியும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 4 பகுதிகளில் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் புதுச்சேரி அரசு பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை.

Advertising
Advertising

இதனால் வெளியூர் செல்லும் பொதுமக்கள், மற்றும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். இந்த நிலையில், 4வது நாளாக தொடர்ந்த இந்த போராட்டத்தின் எதிரொலியாக 3 மாத சம்பளத்தை ஊழியர்களின் வங்கி கணக்கில் புதுச்சேரி அரசு செலுத்தியுள்ளது. இருப்பினும், தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை. ஏனென்றால், அவர்களது முக்கியமான கோரிக்கைகளான தீபாவளி போனஸ், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்றவை தொடர்பாக எந்த வித பதிலும் சொல்லவில்லை. எனவே, 3 மாத சம்பள பாக்கியை வழங்கிவிட்டாலும், மற்ற கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதுவரை பேருந்துகளை இயக்கமாட்டோம் என போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, போக்குவரத்து நிர்வாகம் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பேருந்துகள் இயக்கும் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: