தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங் : விமானியாக 2 நிமிடங்கள் இயக்கி சாதனை

பெங்களூரு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பயணித்தார். இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இலகு ரக ‘தேஜஸ்’ போர் விமானம், விமானப்படை, கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை தயாரிக்கும் பெங்களூரு இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்துக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வந்தார். அப்போது அவர், தேஜஸ் விமானத்தில் பயணித்தார். இதன் மூலம், இந்த விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இந்த பயணத்துக்குப் பிறகு ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘‘விமானம் மிகவும் மிருதுவாக சென்றது. மிகவும் சிலிர்த்துப் போனேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று. இது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.

எனவேதான் தேஜஸ்வில் பறப்பதும், அதை அனுபவிப்பதும் எனக்கு இயல்பாகவே வந்தது. போர் விமானிகள் இந்த விமானங்களில் எந்த சூழ்நிலையில் பறக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்வதற்காகதான் இந்த விமானத்தில் பயணித்தேன். இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். உலகெங்கிலும் போர் விமானங்களை ஏற்றுமதி  செய்யும் நிலைமைைய நாம் எட்டியுள்ளோம். தென் கிழக்கு ஆசிய நாடுகள் போர் விமானங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. விமானிகளின் உத்தரவுகளை பின்பற்றி 2 நிமிடங்கள் விமானத்தை கட்டுப்படுத்தினேன். பறக்க விட்டேன். அந்த இரண்டு நிமிடங்கள் மறக்க முடியாதது,” என்றார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், விமான படை துணை மார்ஷல் திவாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது குறித்து துணை மார்ஷல் திவாரி கூறுகையில், “பாதுகாப்பு துறை அமைச்சர் 2 நிமிடங்கள் விமானத்தில் பறந்தார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. விமானத்தில் இருக்கும் சில தொழில்நுட்பங்கள் குறித்து அமைச்சருக்கு விளக்கினோம். 20-25கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல், லேசர் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்டவை குறித்து விவரித்தோம்” என்றார்.

Related Stories: