காங்கிரசுக்கு கட்சித் தாவலா? ம.பி. பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் மறுப்பு

போபால்: ‘நாங்கள் ஒருபோதும் காங்கிரசில் இணைய மாட்டோம்,’ என்று மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்து வரும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 230 இடங்களில் பெரும்பான்மைக்கு 2 எம்எல்ஏ.க்கள் குறைந்தது. இதனால், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்எல்ஏ.க்கள், சமாஜ்வாடி எம்எல்ஏ ஒருவர், 4 சுயேச்சை எம்எல்ஏ.க்கள் ஆதரவுடன் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ்  ஆட்சி அமைத்தது. இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில், இக்கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ.க்கள் 6 பேரும், கடந்த 16ம் தேதி காங்கிரசுக்கு மொத்தமாக தாவினர். அதேபோல், மத்திய பிரதேசத்தில் உள்ள 2 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்களும்  காங்கிரசில் இணைவார்கள் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை அவர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக, இம்மாநில பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்களான சஞ்சீவ் சிங் குஷ்வாகாவும், ராம்பாய் சிங்கும் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் ஒருபோதும் பகுஜன் சமாஜில் இருந்து விலக மாட்டோம். எங்கள் தலைவி மாயாவதியுடன் தான் இப்போதும், எப்போதும் தொடர்ந்து இருப்போம். எங்கள் கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் இப்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் காங்கிரசில் சேரமாட்டோம். நாங்கள் மாயாவதியின் தயவால்தான் மத்திய பிரதேசத்தில் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளோம். எனவே, அவருக்கு  விசுவாசமாக இருப்போம்,’’ என்றனர்.

Related Stories: