விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: தடைமீறி தந்தி சட்ட நகல் எரித்த பெண்கள் உட்பட பலர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களின் வழியாக கடும் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மின் கோபுரங்கள் அமைக்கப்படும் மாவட்டங்களில் நேற்று போராட்டம் நடந்தது. அதன்படி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் மாநில துணை செயலாளர் ஸ்டாலின் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  அப்போது, உயர்மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் 1865ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தந்தி சட்டம் இருப்பதால், விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, இந்திய தந்தி சட்ட நகலை எரித்தனர்.

அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் தடையை மீறி, இந்திய தந்தி சட்ட நகலை அவர்கள் எரித்தனர். இதையடுத்து 8 பெண்கள் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சட்ட நகலை எரித்ததாக 4 பெண்கள் உள்ளிட்ட 52 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். ஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் அருகே தந்தி சட்ட நகலை எரித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஒரு பெண் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு, சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் எல்எல்ஏ டில்லிபாபு உட்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல தமிழகம் முழுவதும் மொத்தம் 10 இ்டங்களில் போராட்டம் நடந்தது.

Related Stories: