அதிராம்பட்டினம் அருகே ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுப்பு

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் அருகே வீட்டுக்கு காம்பவுன்ட் சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். ஒரத்தநாடு பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வள்ளிகொல்லைக்காடு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டின் பின்புறம் காம்பவுன்ட் சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 5 அடி ஆழத்தில் பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து தாசில்தார் மற்றும் ஆர்டிஓவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம், ஆர்ஐ ரவிச்சந்திரன், சிவன் கோவில் நிர்வாக அதிகாரி சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை 5 அடி உயரமும், 500 கிலோ எடையும் உள்ளது தெரியவந்தது. இந்த சிலை பல லட்சம் மதிப்புள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் சிலைகள் இருக்கும் தடயம் இருப்பதால் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கு முன் அதிராம்பட்டினம் பழஞ்சூர் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சண்முகம் கூறுகையில், இப்பகுதியை சுற்றி அடுத்தடுத்து ஐம்பொன் சிலைகள் கிடைத்து வருகிறது. அதிவீரராமபாண்டியன் கோட்டை இப்பகுதியில் இருந்ததால் அதிகளவில் ஐம்பொன் சிலைகள் கிடைக்கக்கூடும். எனவே இப்பகுதியை அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.

Related Stories: