இந்தியை வைத்து கலவரத்தை தூண்டும் நடவடிக்கையில் அமித்ஷா இறங்கியுள்ளார்: கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: இந்தி மொழியை வைத்து இந்தியாவில் கலவரத்தை தூண்டும் நடவடிக்கைகளில் அமித்ஷா இறங்கியுள்ளார் என்று ேகரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.இந்தி தினத்தை முன்னிட்டு அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் அனைவருக்கும் பொது மொழியாக இந்தியை அங்கீகரிக்க வேண்டும். அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், ேமற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா  பல்வேறு மொழிகளை அங்கீகரிக்கும் ஒரு நாடாகும். இந்தி தேசிய மொழியாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மொழியின் பெயரால் நம் நாட்டில் இப்போது பிரச்னைகள் எதுவும் இல்லை. இந்தி மொழி பேசாததால், தான் இந்தியன் அல்ல என்று எந்த ஒரு இந்திய குடிமகனுக்கும் தோன்றவேண்டிய சூழ்நிலையும் தற்போது இல்லை. அனைவரும் தங்களது தாய்மொழியை சொந்த தாய்போல கருதுகின்றனர்.

அப்படி இருக்கும்போது அனைவரும் தாய்மொழியை தவிர்த்து இந்தியை படிக்கவேண்டும் என்று கூறுவது தாயை அவமதிப்பதற்கு சமமாகும். தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் யாரும் இந்தி பேசுவது கிடையாது. அப்பகுதிகளில் இந்தியை முக்கிய மொழியாக மாற்ற வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்தியால் மட்டும்தான் நம் நாட்டை ஒன்றுபடுத்த முடியும் என்று கூறுவது அபத்தமாகும். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கும் போராகும். அவரது கருத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய பின்னரும் தன் முடிவில் உறுதியாக இருப்பது மொழியை வைத்து இந்தியாவில் கலவரத்தை தூண்டும் சங் பரிவாரின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.  இந்தி மொழியை வைத்து இந்தியாவில் கலவரத்தை தூண்டும் நடவடிக்கைகளில் அமித்ஷா இறங்கியுள்ளார். எனவே கலவரத்தை தூண்டும் சங் பரிவாரின் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கவேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: