தேசத்துரோக வழக்கு: ஜே.என்.யூ முன்னாள் மாணவி ஷீலா ரஷீத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: தேசத்துரோக வழக்கில், ஜே.என்.யூ முன்னாள் மாணவி ஷீலா ரஷீத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விவித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழக முன்னாள் மாணவி ஷீலா ரஷீத், இவர் சமூக ஆர்வலராக செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதி வரும் இவர் காஷ்மீரைச் சேரந்தவர் ஆவார். ஆனால், தமது பதிவுகள் மூலம் தொடர்ந்து தேசத்திற்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி, இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட வேண்டும், என்று கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா ஷீலா ரஷீத்துக்கு எதிராக ஒரு கிரிமினல் புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்திலும் வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் ஷீலா ரஷீத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தம்மை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க கோரி, ஷீலா ரஷீத் தரப்பில் அவரது வழக்கறிஞர் சதீஷ் தம்தா டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கானது  கூடுதல் அமர்வு நீதிபதி பவன் குமார் ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விஷயத்தில் விரிவான விசாரணை தேவை என்று கூறிய நீதிபதி, வழக்கை நவம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுமட்டுமல்லாது, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷீலா தீட்சித்தை நவம்பர் 5ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: