ஒடிசாவில் பைலட்டான முதல் பழங்குடியின பெண் : முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து

மால்கங்கிரி:  ஒடிசாவில் முதல் முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த பெண் ஒருவர், விமானி ஆகி உள்ளார். அவருக்கு முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசாவில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த மால்கன்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரினியாஸ் லக்ரா. இவர் காவல்துறையில் ஹவில்தாரராக இருக்கிறார். இவரது மகள் அனுப்பிரியா அங்குள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். பின்னர் செமிலிகுடாவில் மேல்நிலைப்படிப்பை நிறைவு செய்தார். பொறியியல் படிப்பை தேர்வு செய்து படித்த அவர் அதனை பாதியில் கைவிட்டார். இந்நிலையில், அனுப்பிரியா கடந்த 2012ம் ஆண்டு விமான பயிற்சி மையத்தில் சேர்ந்து பைலட் ஆகும் முயற்சியை தொடங்கினார்.

மாவோயிஸ்ட்டுக்கள் ஆதிக்கம் மிகுந்த மாவட்டத்தில் இருந்து படித்து, தற்போது அவர் விமானி ஆகி உள்ளார். தனியார் விமானத்தில் துணை விமானியாக அனுப்பிரியா இணைந்துள்ளார். அனுப்பிரியாவிற்கு முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘அனுப்பிரியா அர்ப்பணிப்போடு கூடிய நடவடிக்கைகளின் பலனாய் விமானி ஆகி சாதித்துள்ளார். அவரது வெற்றி பிறருக்கு உதாரணமாகும். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: