ஏழை மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்துக்கு ஆளுநர் அலுவலகம் எதிரானது அல்ல: கிரண்பேடி விளக்கம்

புதுச்சேரி: ஏழை மக்களுக்கு அரிசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆளுநர் அலுவலகம் எதிரானது அல்ல என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுவையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பணத்துக்கு பதில் இலவச அரிசி வழங்குவது என பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான அறிக்கையுடன் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை ராஜ்நிவாஸில் சந்தித்த போது, இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு கிரண்பேடி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக வலைதளத்தில் குறுஞ்செய்தி பதிவிட்டிருந்த கிரண்பேடி, ஆளுநர் அலுவலகம் ஏழை மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்துக்கு எதிரானது அல்ல என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலவச அரிசிக்கு பதில் அதற்குரிய பணத்தை பொதுமக்களுக்கு வழங்கும்படியே தான் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு சார்பில் விநியோகிக்கப்படும் இலவச அரிசிக்கு பதில் அதற்குரிய பணம் பொதுமக்களின் வங்கி கணக்குகளில் போடப்பட்டால் மக்கள் தரமான அரிசியை அவர்கள் தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இதன் முலம் ஊழல் இல்லாத நிலை உருவாவதோடு புதுச்சேரி அரசுக்கு ஆகும் போக்குவரத்து செலவீனம் மற்றும் கூடுதல் பட்ஜெட் செலவீனமும் குறையும் எனவும் ஆலோசனை கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான பிரச்சனை ஏதேனும் இருப்பின் பயனாளிகள் ராஜ்நிவாஸில் நடைபெறும் குறைகேட்கும் நேரம் உட்பட துறைசார்ந்த குறைதீர்ப்பு அமைப்புகளை தொடர்பு கொள்ளலாம் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார். 

Related Stories: