ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை ரகசியமாக விடுதலை செய்தது பாகிஸ்தான்: உளவுத்துறை எச்சரிக்கை

இஸ்லாமபாத்: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை காவலில் இருந்து பாகிஸ்தான் ரகசியமாக விடுத்ததாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவல் ஏற்படும் நிலை உள்ளதால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை தடுப்புக் காவலில் பாகிஸ்தான் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய எல்லையில் நடந்த புல்வாமா தாக்குதலை பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியது. இதனை தொடர்ந்து, இந்திய ராணுவப்படை பாகிஸ்தான் எல்லையான பால்கோட்டில் உள்ள தீவிரவாத முகமைகள் மீது தாக்குதல் நடத்தினர்.

ஏற்கனவே, மும்பை தாக்குதல் வழக்கில் முதன்மை குற்றவாளியான மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜமா உத் தவா மற்றும் ஜெய்ஷியே முகமது ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் தலைவர் ஆவான். மேலும், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அண்மையில் ஐ.நா.சபையால் சர்வதேச பயங்கரவாதி என மசூத் அசார் பிரகடனம் செய்யப்பட்டான். இதையடுத்து, மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து திடீரென மசூத் அசாரை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சில வழக்குகளில் கைது செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ ரத்து செய்வதோடு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் வழங்கினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனங்களை தெரிவித்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மிகவும் பதற்றமான சூழ்நிலை இன்றும் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை சிறையில் இருந்து ரகசியமாக பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உளவுத்துறை அளித்த தகவலின் படி, ஜம்மு-காஷ்மீரின் அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, சியால்கோட்-ஜம்மு மற்றும் ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. இதற்காக, ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் தனது படையை குவித்து வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே மசூத் அசார் மூலமாக எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் பயங்கர தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: