தாலிபானுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்து: அமைதி உடன்படிக்கையில் இருந்தும் விலகல்...அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்

வாஷிங்டன்: தாலிபானுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளில் சுமார் 5000 வீரர்களை திரும்ப பெறுவது  தொடர்பாக தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக தலிபான் அமைப்பு கூறியதையடுத்து இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்தது. இது ஒருபுறமிருக்க ஆங்காங்கே  வன்முறைச் சம்பவங்களும் நடந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையே, அமெரிக்காவின் கேம்ப் டேவிட் பகுதியில் தாலிபன் தலைவர்கள் மற்றும் ஆப்கான் அதிபர் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரகசிய பேச்சுவார்த்தையில்  ஈடுபட இருந்தார். இதன் மூலம் அமைதி உடன்படிக்கை ஏற்படும் என சொல்லப்பட்டது.

ஆனால், கடந்த 5-ம் தேதி காலை உள்ளூர் நேரப்படி 10.10 மணியளவில் ஷாஷ் தரக் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் அமெரிக்க படைவீரர் மற்றும் 11 குடிமக்கள் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்பு படையினர்  மற்றும் பொதுமக்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப, பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டிருப்பது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்களுக்கு தகுதி  இல்லை என்பதை காட்டியிருப்பதாக தெரிவித்தார். இதனால், பேச்சுவார்த்தை ரத்து செய்துள்ளதாகவும், அமைதி உடன்படிக்கையில் இருந்து விலகுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Related Stories: