தமிழகம் முழுவதும் உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றி தவிக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்: மதிப்புக்கூட்டி விற்கும் மையங்களை ஏற்படுத்த கோரிக்கை

வேலூர்: இந்தியாவில் மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நெசவுத்தொழில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக இந்தியாவில். விசைத்தறி மூலம் உற்பத்தியாகும் துணியில் நான்கில் ஒரு பகுதி தமிழகத்தின் கொங்கு மண்டலத்திலும், மற்றவை வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் உருவாகிறது. இந்நிலையில் தங்கள் தொழில் செழிக்க அரசின் சலுகைகள் அதிகளவில் தேவைப்படுவதாக இதில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். விசைத்தறி நெசவுத்தொழிலை கைதூக்கிவிடுவதற்காக 500 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்தாலும், நெசவுத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி மிக குறைவாக உள்ளதாக அவர்கள் தரப்பில் வேதனை குரல்கள் எழுந்து வருகின்றன. வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளடங்கிய 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், அதை சார்ந்த பாவு ஓட்டுதல் ஆலை, நூல் சுற்றும் மிஷின்கள் மூலம் லுங்கி, கைத்தறி வேட்டி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை மூலப்பொருட்களின் விலை உயர்வு, மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஆகியவை நெசவுத்தொழிலை பாதித்துள்ளது. விசைத்தறியில் வேஷ்டி ஒன்றுக்கு ₹22 வரையும், சேலை ஒன்றுக்கு ₹40 வரையும் கூலியாக வழங்கப்படுகிறது.  நடைமுறை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் தங்களுக்கு 50 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில் அரசு 10 சதவீத கூலி உயர்வை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சேலை ஒன்றுக்கு ₹43.10ம், வேட்டிக்கு ₹24ம் கூலியாக கிடைக்கும். ஆனால் இதுபோதுமானதாக இல்லை என்பது விசைத்தறி நெசவாளர்களின் வேதனை குரல்.

எனவே, நெசவாளர்களுக்கு அவர்கள் கேட்டபடி 50 சதவீத கூலி உயர்வுடன், மூலப்பொருட்கள் கிடைப்பதில் உள்ள இடர்பாடுகளை களைதல் ஆகியவற்றுடன், ஸ்மார்ட் கார்டு திட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, கைத்தறி, விசைத்தறி தொழிலை காப்பதற்கான அவற்றுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.இதுதவிர அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் நலிந்த கூட்டுறவு கைத்தறி சொசைட்டிகளுக்கும் எட்ட உதவ வேண்டும் என்பதும் இவர்கள் கோரிக்கை பட்டியலில் உள்ளது. மெகா கிளஸ்டர் திட்டத்தை சிறிய நெசவாளர்கள் குழுக்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் இவர்கள் அரசிடம் கேட்கின்றனர்.சூரிய ஒளி மின்னுற்பத்தி உபகரணங்கள் வாங்க 100 சதவிகித மானியம், விசைத்தறி இயந்திரங்களை நவீனப்படுத்த கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளும் இவர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன. மதிப்புக் கூட்டுதல் என்பது நவீன கால வணிக யுக்தியாக உள்ளது. விசைத்தறி துணிகளை மதிப்புக் கூட்டி விற்கும் மையங்களை அமைக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: