அரசு மருத்துவமனைக்குள் வெளிவாகனங்கள் நிறுத்த தடை விதிப்பு

*சாலையோரம் நிறுத்தப்படுவதால் நெருக்கடி

கோவை : கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, ஈரோடு மற்றும் கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
அதன்படி, தினமும் சுமார் 6 ஆயிரம் பேர் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும், டாக்டர்கள் அனைவரும் கார் பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் கட்டடங்கள் நிரம்பி உள்ள நிலையில், வாகனங்கள் நிறுத்த போதிய இடமில்லை.

இருப்பினும், மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களை டாக்டர்கள் கார் நிறுத்தவும், பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் வாகனங்கள், மருத்துவமனை ஊழியர்கள் வாகனங்கள் பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளனர். தவிர, நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் தங்களின் வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் பார்க்கிங் செய்ய வசதி உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்களின் வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் பார்க்கிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, நோயாளிகளுடன் வருபவர்கள் மற்றும் உள்நோயாளிகளாக இருப்பவர்களுடன் தங்கி உள்ளவர்களின் வாகனங்கள் நோயாளி அனுமதிக்கப்படும் வார்டு அருகே நிறுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் பலர் வாகனங்களை முறையாக நிறுத்தாமல், கிடைக்கும் எல்லா இடங்களிலும் நிறுத்தி வந்தனர்.

இதனால், மருத்துவமனை வளாகத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டு, பொதுமக்கள், டாக்டர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். தவிர, அடிக்கடி வாகன திருட்டும் நடந்து வந்தது. இந்த நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காண மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, சமீபத்தில் மருத்துவமனை டீன் மற்றும் ஆர்எம்ஓ ஆகியோர் மருத்துவமனை வளாகத்தில் தொடர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கையை விட நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது தெரியவந்தது. மேலும், குறிப்பிட்ட சில வாகனங்கள் தினமும் நிறுத்தப்பட்டு வருவதும், பல வாகனங்கள் நீண்ட காலமாக ஒரே இடத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

மேலும், ரயில் பயணிகள், பேருந்து பயணிகள், திருட்டு வாகனங்கள் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டு வருவது தெரியவந்தது. இப்படி வெளி வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மருத்துவமனை வளாகத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், மருத்துவமனை பாதுகாவலர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை மருத்துவமனையின் ஆர்எம்ஓ சரவணபிரியா பிறப்பித்துள்ளார். அதன்படி, டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகளின் உறவினர்கள் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.

இதையடுத்து, மருத்துவமனை பாதுகாவலர்கள் வெளி நபர்களின் வாகனங்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். தவிர, வெளிநோயாளிகளாக சிகிச்சைக்கு வரும் நபர்களின் வாகனங்கள் உள்ளே போதிய இடவசதி இல்லை என கூறி அந்த வாகனங்களும் மருத்துவமனைக்குள் அனுமதிப்பது இல்லை. இதனால், மருத்துவமனையின் வெளிப்புறம் உள்ள சாலையின் இரண்டு பக்கத்தில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு வருகிறது.

தவிர, அரசு கல்லூரி சாலையிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனைக்குள் வாகனங்களை அனுமதிக்க மறுப்பதால், மருத்துவமனை காவலர்களுடன் தினமும் நோயாளிகள், பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மருத்துவமனை நிர்வாகத்தின் புதிய முயற்சியால், மருத்துவமனை வளாகத்தில் தற்போது இடநெருக்கடி குறைந்துள்ளது. நோயாளிகள், பொதுமக்கள், டாக்டர்கள் இடையூறு இன்றி நடந்து செல்ல முடிகிறது.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில்,“மருத்துவமனைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை விட மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த ஒரு வாரமாக வாகன திருட்டு இல்லாமல் இருக்கிறது. மருத்துவமனை வளாகமும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் எளிதாக பயன்படுத்த கூடிய வகையிலும், ஆம்புலன்ஸ்களை எளிதாக இயக்கவும் முடிகிறது. மேலும், இந்த நடவடிக்கையால் 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட காலமாக இருப்பதும், இதுவரை அதனை எடுக்க யாரும் வராமல் இருப்பதும் தெரியவந்தது.

கொள்ளை, திருட்டு வழக்கில் உள்ளவர்கள் கூட இங்கு வாகனத்தை நிறுத்தி செல்கின்றனர். ஒவ்வொருவரையும் தனியாக கண்காணிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் இது போல் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாது. எங்களின் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு நோயாளிகள் நலனுக்காக இது போன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர்.

மாநகராட்சி உதவி தேவை

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள், ஊழியர்கள் வாகனங்கள் நிறுத்தவே இடம் இல்லை என்பது தான் உண்மை. இதில், நோயாளிகள் தினமும் 600-க்கும் மேற்பட்ட வாகனம் மூலம் மருத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது, மருத்துவமனை நிர்வாகம் உள்ளே நிறுத்த அனுமதி மறுப்பதால், இவர்கள் வெளியில் வாகனத்தை நிறுத்தி வருகின்றனர்.
இதனால், சாலை முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நோயாளிகள் வாகனங்களை நிறுத்த தேவையான இடவசதியை மருத்துவமனை பகுதியில் செய்து தர முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், டாக்டர்கள் தரப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post அரசு மருத்துவமனைக்குள் வெளிவாகனங்கள் நிறுத்த தடை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: