அம்பேத்கர் சிலை உடைப்புக்கு தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம்: திருமாவளவன் பேட்டி

சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று திருமாவளவன் குற்றம்சாட்டினார். வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வன்னியரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: வேதாரண்யத்தில் சாதி, மத வெறி அமைப்புடன் தொடர்புடையவர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்துள்ளனர். தமிழகத்தில்தான் சிலைகளை அவமதிக்கும் நிலை நீடித்து வருகிறது. இதற்கு  அரசு அதிகாரிகளின் மெத்தனமும், அரசின் அலட்சியப் போக்கும் தான் காரணம். இதுபோன்று சிலைகளை தகர்க்கும் செயல்களுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

வேதாரண்யத்தில் அம்பேத்கரின் சிலையை உடைக்கும் வரை அங்குள்ள போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக காவல்துறையின் அலட்சியப் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். வேதாரண்யத்தில் உடனடியாக சட்டம், ஒழுங்கை பாதுகாக்க  வேண்டும் என்பதற்காக அம்பேத்கரின் சிமென்ட் சிலையை போலீசார் வைத்துள்ளனர். ஆனால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது. வேதாரண்யத்தில் அம்பேத்கரின் வெண்கல சிலையை அரசு சார்பில் நிறுவ வேண்டும். தமிழகத்தில் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சிலைகள் அதிகமாக அவமதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தலைதூக்கி வருகிற மதவாத சக்திகள்தான் காரணம். சுங்க சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பதை உடனே திரும்பப்பெற வேண்டும். இல்லை என்றால் இது மக்களின் போராட்டமாக வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: