மதுரை பெண் இன்ஸ்பெக்டர் முயற்சியால் மனமாற்றம்... கஞ்சா விற்றவர் உப்பு விற்கிறார்

மதுரை: மதுரையில் கஞ்சா வியாபாரியை, போலீஸ் இன்ஸ்பெக்டர் திருத்தி அவரை உப்பு வியாபாரியாக மாற்றி இருப்பது பாராட்டுகளை பெற்றுள்ளது. மதுரை, மகபூப்பாளையத்தை சேர்ந்தவர் இப்ராகிம்ஷா (54). கஞ்சா வியாபாரி. இவர் மீது மதுரையில் திலகர் திடல், திடீர் நகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கஞ்சா விற்பனையில் போலீசிடம் சிக்கும் இவர் கைதாவதும், ஜாமீனில் வெளிவருவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில், மதுரை திலகர் திடல் சட்டம், ஒழுங்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா, சமீபத்தில் ரோந்தின்போது, இப்ராகிம் ஷாவை திலகர்திடல் பகுதியில் பார்த்தார். அவரிடம், ‘‘இன்றைக்கு இளைஞர்கள் நீங்கள் விற்கும் கஞ்சாவை வாங்கிப் பயன்படுத்தி, தங்களின் எதிர்காலத்தையே தொலைத்து விடுகிறார்கள். அவர்களுடன், அவர்களது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. இது எவ்வளவு பெரிய சமூகத் துரோகம். இதிலிருந்து நீங்கள் மீண்டு விட வேண்டும்’’ என்று அறிவுரை கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட இப்ராகிம்ஷா, ‘‘ஆதரவற்ற நிலையில் நான் இருக்கிறேன். ஏற்கனவே உள்ள வழக்குகளுக்கான செலவுக்குக் கூட பணமின்றி கஷ்டப்படுகிறேன். மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நிலைக்கு தான் தள்ளப்பட்டிருக்கிறேன். திருந்தி வாழ நினைக்கும் எனக்கு யாரும் வேலை தர மறுக்கிறார்கள். ஏற்கனவே நான் சைக்கிளில் தெருத்தெருவாகச் சென்று உப்பு விற்கும் தொழில் செய்து வந்தேன். யாராவது உதவி செய்தால் அந்த தொழிலையே திரும்பச் செய்து பிழைத்துக் கொள்வேன். இந்த பாழாய்ப்போன கஞ்சா விற்பனையிலிருந்து நான் என்னைத் திருத்திக் கொண்டு, மரியாதையோடு வாழ்க்கை நடத்துவேன்’’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா, கஞ்சா வியாபாரத்தை முழுமையாக விட்டு விட்டு, ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதாக இப்ராகிம்ஷாவிடம் உறுதி வாங்கிக் கொண்டார். பின்னர், இப்ராகிம்ஷா திருந்தி வாழ்வதற்கு உதவியாக அவர் ஆரம்ப காலத்தில் செய்து வந்த உப்பு வியாபாரத்தை மீண்டும் செய்வதற்கு வசதியாக ரூ.7 ஆயிரம் மதிப்பில் ஒரு புதிய சைக்கிள், உப்பு மூட்டை ஒன்றும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார். இதனைப் பெற்றுக்கொண்ட இப்ராகிம்ஷா தற்போது வெகு உற்சாகத்துடன் இப்பகுதியில் கூவி கூவி உப்பு விற்று வருகிறார்.

இப்ராகிம்ஷா கூறும்போது, ‘‘இனிமேல், சமூகத்தை குறிப்பாக இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா வியாபாரத்தை நினைக்கவே மாட்டேன். உழைத்து உயிர் வாழ்வேன். என்னை ஒரு கஞ்சா விற்பவனாக, மிக மோசமாக நடத்தும் காவல்துறையினர் தற்போது, கைகுலுக்கி பாராட்டி அனுப்புகின்றனர். சமூகத்தில் என் மரியாதை உயர்ந்திருக்கிறது. என்னைப்போல குற்றங்களில் இருப்பவர்கள் திருந்தி வாழ வேண்டும்’’ என்றார். கஞ்சா வியாபாரத்திலிருந்து மீண்டு, உழைப்பதற்கு வழிகாட்டிய பெண் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலாவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories: