ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர்வரத்து அதிகரிப்பு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 12-வது நாளாக தடை நீட்டிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை நீட்டிப்பு செய்தது. தொடர் வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. அங்கு கடந்த வாரத்தில் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டின. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 12-ந்தேதி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 3 லட்சம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வந்ததால் ஐந்தருவிகள் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தொங்கு பாலத்தை தொட்டபடி புது வெள்ளம் சீறிப்பாய்ந்தது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் தொங்குபாலம் பார்வையாளர் கோபுரம், நடைபாதை, மெயின் அருவி பகுதி ஆகியவை சேதமடைந்தன. இதேபோல் ஒகேனக்கல்லில் கர்நாடகா மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதற்காக கட்டப்பட்ட பாலம் மற்றும் பார்வையாளர் கோபுரம் ஆகியவையும் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்து உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மழை பெய்வதால் அங்குள்ள அணைகளில் இருந்து கூடுதலாக மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 12-வது நாளாக தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>