உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தவேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திண்டுக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பால் கொள்முதலுக்கு ரூ.4 உயர்த்தி விட்டு விற்பனையில் ரூ.6 உயர்த்தியிருப்பதற்கான அவசியம் என்ன? வியாபார நோக்கில் அரசு விலையை உயர்த்தியுள்ளது. பாலுக்கு மானியம் வழங்க வேண்டும். அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வேலூர் தேர்தலில் ஆளும்கட்சிக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கூறும் முதல்வர், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் யாருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பது தெரியவரும்.தமிழகம் மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
Advertising

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10 சதவீதம் மட்டுமே வேலைகள் நடைபெற்றுள்ளது. 90 சதவீதம் பணிகள் நடைபெறாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆளும்கட்சியினர் குடிமராமத்து பணி என்ற பெயரில் மொத்தமாக பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.நீலகிரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதை பார்க்க முதல்வருக்கு அக்கறை இல்லை. பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் சாதி அடையாளங்களை முன்னிறுத்துவது போல சாதி கயிறுகளை கட்டி வரக்கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது எனக்கு தெரியாது என்கிறார். அப்படி என்றால் சாதி அடையாளத்தோடு ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டுமென்று அமைச்சர் விரும்புகிறாரா? இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: