குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை சாலையை சீரமைக்க கோரிக்கை

நெய்வேலி: குறிஞ்சிப்பாடி அரசு பொதுமருத்துவமனையில் நகர பகுதி மக்கள் மட்டுமன்றி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களும் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனைவில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு, சித்தா மருத்துவ பிரிவு, உடற்கூறு ஆய்வுகள் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகள் தினந்தோறும்  வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. மேலும் மருத்துவமனை நுழைவுவாயில் வெளியே இருக்கும் கழிவுநீர் கால்வாய்கள் திறந்தே கிடப்பதால் இச்சாலை வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகள்  மட்டுமின்றி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் முக்கை பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர். சிலர் இருசக்கர வாகனத்தில் அவசரமாக வரும் போது திடீரென்று பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.

மேலும் கழிவுநீர்  கால்வாய் திறந்தே கிடப்பதால்  மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு  டெங்கு, மலேரியா போன்ற நோய்கள்  ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சாலையை சீரமைக்கவும், கழிவுநீர் கால்வாய் மீது சிலாப் அமைக்கவும் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: